தாயின் இறுதிச் சடங்கினை முடித்த கையோடு பணிக்குத் திரும்பிய பிரதமர் மோடி!

தாயின் இறுதிச் சடங்கினை முடித்த கையோடு பணிக்குத் திரும்பிய பிரதமர் மோடி!

பிரதமர் மோடியின் தாயாரின் இறுதிச் சடங்குகள் முடிந்த ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரியை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸை காணொலி மூலமாக கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் மேற்கு வங்கத்தில் ரூ.7,800 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களையும் தொடங்கிவைத்தார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமரை ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தினார். ஆனாலும் பிரதமர் மேற்கு வங்க நிகழ்ச்சிகளில் காணொலி மூலமாக கலந்துக்கொண்டார். நிகழ்வின் போது தனது உரையின் தொடக்கத்தில் பேசிய பிரதமர் மோடி, "இன்று நான் உங்களிடையே வர வேண்டும், ஆனால் சில தனிப்பட்ட காரணங்களுக்காக என்னால் வர முடியவில்லை, அதற்காக உங்களிடமும் மேற்கு வங்கத்திடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.

பிரதமரின் தாயார் இறந்த செய்தி காலை 6 மணிக்கு வெளியானது. குஜராத்தில் உள்ள காந்திநகருக்குச் சென்ற பிரதமர் மோடி காலை 9:30 மணியளவில் தாயாருக்கு இறுதிச்சடங்குகளை செய்தார். அதனைத் தொடர்ந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி காலை 11 மணிக்கு பணிக்குத் திரும்பினார்.

வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைத்தப் பின்னர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று கொல்கத்தாவில் தேசிய கங்கா கவுன்சிலின் இரண்டாவது கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சர் மற்றும் உத்தரகண்ட், உத்தரபிரதேசம், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்க முதல்வர்கள் மற்றும் கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள மற்ற மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு பதிலாக துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

தனது தாயை இழந்த நாளிலேயே தனது உத்தியோகபூர்வ பணிகளைத் தொடர்ந்த பிரதமரின் முடிவு சக அமைச்சர்கள் மற்றும் பிற பாஜக தலைவர்களிடமிருந்து பாராட்டைப் பெற்றது. அவர்கள் பிரதமரை ஒரு "கர்மயோகி" என்று பாராட்டினர்.

இது தொடர்பாக கேரளாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், அமைச்சர்களின் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டாம் என்றும், தங்கள் பணிகளை முடித்த பின்னரே அவர்கள் டெல்லிக்கு திரும்ப வேண்டும் என்றும் பிரதமர் கூறிவிட்டார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கர்நாடகாவில் ஒரு நிகழ்ச்சியில் உள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in