கேரளாவில் ஓட்டல் அதிபர் துண்டு, துண்டாக வெட்டிக்கொலை: சென்னை தப்பி வந்த காதல்ஜோடி கைது

கைது செய்யப்பட்ட காதல் ஜோடி முகமது சிபிlல், ஃபர்கானா
கைது செய்யப்பட்ட காதல் ஜோடி முகமது சிபிlல், ஃபர்கானா கேரளாவில் ஓட்டல் அதிபர் துண்டு, துண்டாக வெட்டிக்கொலை: சென்னை தப்பி வந்த காதல்ஜோடி கைது

கேரளா மாநிலம், மலப்புரத்தில் ஓட்டல் அதிபரை கொலை செய்து உடலை துண்டு துண்டாகவெட்டி சூட்கேஸில் அடைத்து வீசிய காதல் ஜோடி சென்னை ரயில் நிலையத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளா மாநிலம். மலப்புரம் திரூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்திக்(58). கோழிக்கோடு பகுதியில் ஓட்டல் நடத்தி வந்த இவரை கடந்த சில நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள் போலீஸில் புகார் அளித்திருந்தனர். இதனையடுத்து திரூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், சித்திக் வங்கிக் கணக்கில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் இருமுறை ஏடிஎம்மில் இருந்து எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஏடிஎம்மில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது 20 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பணத்தை எடுத்து செல்வது பதிவாகி இருந்தது. சிசிடிவி காட்சியில் பதிவான புகைப்படத்தை வைத்து அந்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே பாலக்காடு காட்டுப்பகுதியில் சந்தேகப்படும் படியான சூட்கேஸ் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீஸார் அங்கு சென்று சூட்கேஸைத் திறந்து பார்த்த போது அதில் கை,கால்கள், துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் காணாமல் போனவர்களின் பட்டியலை வைத்து விசாரணை நடத்தினர்..

அப்போது, விசாரணையில் சூட்கேஸ்சில் கைப்பற்றப்பட்ட உடல் திரூரில் காணாமல் போன சித்திக் உடல் என்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து ஏடிஎம் சிசிடிவி புகைப்படத்தில் உள்ள நபருக்கும் சித்திக்கும் என்ன தொடர்பு என போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடந்த 15 நாட்களுக்கு முன்பு சித்திக்கின் ஓட்டலில் முகமது சிபில் என்பவர் பணிக்கு சேர்ந்தது தெரியவந்துள்ளது.

முகமது சிபிlல், ஃபர்கானா
முகமது சிபிlல், ஃபர்கானா கேரளாவில் ஓட்டல் அதிபர் துண்டு, துண்டாக வெட்டிக்கொலை: சென்னை தப்பி வந்த காதல்ஜோடி கைது

இதனையடுத்து முகமது சிபிலின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் அவர் மற்றொரு செல்போனுக்கு அடிக்கடி பேசியது தெரிய வந்தது. அந்த செல்போன் எண் ஃபர்கானா என்ற இளம்பெண்ணுடையது என்பது தெரியவந்தது. பின்னர் இரண்டு பேரின் புகைப்படத்தை கேரளா போலீஸார், அனைத்து மாநில காவல்துறைக்கும் அனுப்பி தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தனர்.

மேலும் இவர்கள் ரயில் மூலம் தப்பித்து இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் ரயில்வே போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார், முகமது சிபில் மற்றும் ஃபர்கானா ஆகிய இருவரது புகைப்படத்தையும் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரயில் நிலைய இரண்டா வது நடைமேடையில் பெங்களூருவில் இருந்து அசாமிற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறுவதற்கு முயற்சி செய்த அவர்கள் இருவரையும் போலீஸார் பிடித்து ரயில் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

குறிப்பாக, அவர்களிடம் கேரளாவில் நடைபெற்ற ஓட்டல் அதிபர் கொலை சம்பவம் தொடர்பாக எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் இரண்டு பேரும் காதல் காரணமாக வீட்டை விட்டு ஓடி வந்து விட்டதாக எங்களுக்கு தகவல் கிடைக்கப் பெற்றதாகவும், காலையில் பெற்றோர் வந்து உங்கள் இருவரையும் அழைத்துச் செல்வார்கள் என்றும் போலீஸார் தெரிவைத்துள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்து 16 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை பறிமுதல் செய்து திரூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து இன்று காலை சென்னை வந்த கேரளா திரூர் போலீஸாரிடம் காதல் ஜோடியை ஒப்படைத்தனர். இதனையடுத்து கேரளா போலீஸார் இருவரையும் கேரளாவிற்கு அழைத்துச் சென்றனர். எதற்காக இவர்கள் இருவரும் சித்திக்கை கொலை செய்தனர் என்பது கேரளா போலீஸ் விசாரணைக்குப் பின்பே தெரிய வரும் என எழும்பூர் ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in