கலெக்ஷனில் கருத்தாய் இருக்கும் உளவுப் புள்ளிகள்!
கோவையில் வெடிபொருட்கள் சிக்கிய விவகாரம் திமுக அரசுக்கு பெரும் தலைவலியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதைவைத்து, “ஆட்சியே கலைந்திருக்கும்” என அண்ணாமலை ஒருபக்கம் மிரட்டிக் கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் காரணம் உளவுத்துறையின் மெத்தனப் போக்குதான் என்கிற கருத்தும் நிலவுகிறது. கோவையில் மட்டுமல்ல... தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உளவுத் துறையினர் உஷாராக இல்லை என்பதுதான் யதார்த்தம் என்கிறார்கள். பல இடங்களில் குற்றச்செயல்களை தடுக்கும் நடவடிக்கையைத் தவிர்த்து மற்ற ‘எல்லா’ விஷயத்திலும் மூக்கை நுழைக்கிறார்களாம் உளவுப் புள்ளிகள்.
திருச்சி உளவுத்துறையில் கீழ்மட்ட அளவில் இருக்கும் போலீஸார் சிலர், மணல் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத தொழிலில் இருக்கும் புள்ளிகளிடம் டீல் வைத்துக்கொண்டு தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்களாம். இவர்களைக் கண்காணிக்க வேண்டிய அதிகாரி ஒருவர் இவர்களையே மிஞ்சுமளவுக்கு கொழிக்கிறாராம். எதையும் விட்டுவைக்காத அந்த அதிகாரி, தீபாவளி சமயத்தில் ஒவ்வொரு ஸ்டேஷனிலிருந்தும் இத்தனை பட்டாசு பெட்டிகள் வரவேண்டும் என கறாராகக் கேட்டு வாங்கினாராம். மார்க்கெட் ஸ்டேஷன் லிமிட்டிலிருந்து மட்டும் 50 பெட்டிகள் அவருக்காக கேட்டுவாங்கப்பட்டதாம்.
துணை ஆணையர் வீட்டுக்குக்கூட அத்தனை பட்டாசுப் பெட்டிகள் போயிருக்காதாம். ஏடாகூடமா எதாச்சும் ரிப்போர்ட் போட்டுவிட்டுட்டாப் போச்சே என்ற பயத்தில் உளவுத்துறை அதிகாரிக்கு வரிசையில் நின்று பட்டாசுப் பெட்டிகளை வழங்கிவிட்டு வந்தார்களாம் ஆய்வாளர்கள். கோவை சம்பவத்துக்குப் பிறகு இந்த விஷயத்தை பிரதானமாகப் பேசும் திருச்சி காவல்துறையினர், “இவங்க இந்த ‘வேட்டை’ நடத்திட்டு இருந்தா டெரரிஸ்ட்களை எப்படிப் பிடிக்கிறது?” என்று கிண்டலடிக்கிறார்களாம்.