‘என்டிடிவி-யை வம்படியாக வாங்குகிறார் மோடியின் தோஸ்த்!’ - காங்கிரஸ் கடும் கண்டனம்

‘சுதந்திரமான ஊடகம் எனும் சாயலே இல்லாமல் போய்விடும்’ என விமர்சனம்
ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

என்டிடிவி ஊடகத்த்தின் 29.18 சதவீதப் பங்குகளை அதானி குழுமம் வாங்கியிருப்பதை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்திருக்கிறது.

இந்தியாவின் ஊடக உலகில் என்டிடிவி (நியூடெல்லி டெலிவிஷன்) நிறுவனம் முக்கிய இடம் வகிக்கிறது. என்டிடிவி 24x7, என்டிடிவி இந்தியா, என்டிடிவி ப்ராஃபிட் ஆகிய மூன்று தேசிய செய்தி சேனல்களை இந்நிறுவனம் நடத்திவருகிறது. என்டிடிவி இணையதள செய்திகளைக் கோடிக்கணக்கான வாசகர்கள் வாசிக்கின்றனர். மூத்த ஊடகவியலாளர் பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் இருவரும் இணைந்து தொடங்கிய ஊடகம் இது.

கெளதம் அதானி
கெளதம் அதானி

இந்த ஊடகத்தின் 29.18 சதவீதப் பங்குகளை தங்கள் துணை நிறுவனமான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் நிறுவனம் வாங்குவதாக அதானி குழுமம் நேற்று தெரிவித்தது. ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்தின் பங்குகளில் 25 சதவீதத்துக்கும் அதிகமானவற்றை வாங்கிவிட்டால், மேற்கொண்டு வாங்கப்போகும் பங்குகள் குறித்த வெளிப்படையான அறிவிப்பை வெளியிடலாம் என செபியின் விதிமுறைகள் சொல்கின்றன. அதன்படி, என் டிடிவி நிறுவனத்தின் மேலும் 26 சதவீதப் பங்குகளை வாங்கப்போவதாகவும் அதானி நிறுவனம் தெரிவித்தது.

எனினும், இது குறித்து தங்களுக்கு நேற்று வரை எதுவும் தெரியாது என்று பிரணாய் ராயும் ராதிகா ராயும் தெரிவித்தனர். தங்கள் சம்மதத்துடன் இது நடக்கவில்லை என்றும், இதுகுறித்து தங்களிடம் விவாதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், ‘பிரதமரின் நெருங்கிய நண்பர் நடத்துகின்ற, அதிகமாகக் கடன் வாங்கும் நிறுவனம், பிரபலமான டிவி சேனல் நெட்வொர்க்கை வம்படியாக வாங்குவதற்கான பேரத்தைப் பேசியிருக்கிறார்’ எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், ‘இது பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கு மூலம்தான் நடக்கிறது. இது சுதந்திரமான ஊடகத்தைக் கட்டுப்படுத்தவும், அதன் சாயலே இல்லாதவாறு முடக்கவும் மேற்கொள்ளப்படும் கூச்சமற்ற செயலன்றி வேறில்லை’ என்றும் அவர் விமர்சித்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in