மாணவர்களிடம் ஆபாச கேள்வி கேட்ட யூடியூப் தொகுப்பாளினி: கேமராவை பறிமுதல் செய்த போலீஸார்

மாணவர்களிடம் ஆபாச கேள்வி கேட்ட யூடியூப் தொகுப்பாளினி:  கேமராவை பறிமுதல் செய்த போலீஸார்

மெரினா கடற்கரையில் மாணவர்களிடம் ஆபாச கேள்வி கேட்ட பெண் தொகுப்பாளினியை கண்டித்த போலீஸார், யூடியூப்பர்களிடம் இருந்த கேமிராவை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கடற்கரைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்து அதை யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்து வந்ததாக கடந்தாண்டு வீஜே ஆசன் , தினேஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமான கேள்விகளைக் கேட்டு, அதை யூடியூப் சேனலில் பதிவிடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை ஏற்கெனவே எச்சரித்திருந்தது.

ஆனால் இதனை மீறி veera talks என்ற யூடியூப் சேனலில், பெண் தொகுப்பாளர் ஒருவர் பொது இடங்களில் ஆபாசமான கேள்வி கேட்டு அதை யூடியூப் சேனலில் பதிவேற்றி வந்துள்ளார். இந்த வீடியோக்கள் அனைத்தும் முகம் சுழிக்கும் வகையில் இருப்பதாக பலர் கமெண்டுகளைப் பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் veera talks யூடியூப்பை சேர்ந்த பெண் தொகுப்பாளர் ஒருவர், கல்லூரி மாணவர்களிடம் ஆபாசமான கேள்விகளைக் கேட்டு பேட்டி எடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த வழக்கறிஞர் ஒருவர், பெண் தொகுப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளரிடல் இது குறித்து கேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. இதனால் உடனே வழக்கறிஞர் அவ்வழியாக வந்த ரோந்து காவலர்களிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தார். இதையடுத்து யூடியூப்பர்களிடம் இருந்து கேமிராவை பறிமுதல் செய்ததுடன் அவர்களை மெரினா காவல் நிலையத்திற்கு போலீஸார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இனிமேல் இது போன்ற ஆபாசமான கேள்விகளை மாணவர்களிடம் கேட்கக்கூடாது, ஆபாசமான பேட்டிகளை யூடியூப் சேனலில் இருந்து உடனே நீக்க வேண்டுமென எச்சரித்த போலீஸார் இருவரிடமும் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in