
ஹரியாணாவில் நான்கு ஆண்டுகளாக அனுமதியின்றி சட்டவிரோதமாக தனியார் மருத்துவமனை இயங்கி வந்தது முதலமைச்சரின் பறக்கும் படையினரின் சோதனையில் தெரிய வந்துள்ளது.
ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள ஜமால்பூர் சவுக்கில் தனியார் மருத்துவமனை நான்கு ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்த மருத்துவமனை சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையறிந்த முதலமைச்சரின் பறக்கும் படையினர் மற்றும் மாநில சுகாதாரத்துறையினர் இணைந்து அந்த மருத்துவமனையில் சோதனையிட்டனர். அப்போது விதிகளைப் பின்பற்றாமலும், ஆவணங்கள் இல்லாமலும் மருத்துவமனை இயக்கப்பட்டது தெரிய வந்தது.
இந்த மருத்துவமனையில் பறக்கும்படை மற்றும் சுகாதாரத்துறையினர் சோதனையிட்ட போது, சாம்ப்கா கிராமத்தைச் சேர்ந்த விகாஸ் யாதவ் வரவேற்பாளராகவும், கவாஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்த விகாஸ் என்பவர் மருத்துவராகவும் பணியாற்றியது தெரிய வந்தது. அத்துடன் விகாஸ், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததோடு, எக்ஸ்ரே இயந்திரத்தை இயக்கி, ரத்த மாதிரிகளையும் எடுத்தார் என்று தெரிய வந்தது.
அவரிடம் மருத்துவ சிகிச்சை செய்வதற்கான ஆவணங்களை சுகாதாரத்துறையினர் கேட்ட போது, பிஏஎம்எஸ் சான்றிதழை வழங்கினார்.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், "மருத்துவமனையை நடத்துவதற்கு சான்றிதழ் இல்லை. அலோபதி மருந்துகளை விநியோகிக்க மருந்தாளுநர் இல்லை. அதனால் மருத்துவமனையில் இருந்த கிட்டுகள், மருந்துகள், உபகரணங்களைக் கைப்பற்றியுள்ளோம், எக்ஸ்ரே இயந்திர அறைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் பிலாஸ்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர். கைது செய்யப்பட்ட அவர்கள் இருவரும் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.