பிரசவத்தின் போது கர்ப்பிணி சாவு:மகப்பேறு மருத்துவமனைக்கு 12.5 லட்சம் அபராதம்

பிரசவத்தின் போது கர்ப்பிணி சாவு:மகப்பேறு மருத்துவமனைக்கு  12.5 லட்சம் அபராதம்

பிரசவத்தின்போது மருத்துவர் அஜாக்கிரதையாக இருந்ததால்  பெண் உயிரிழந்த சம்பவத்தில் அரியலூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு 12.5 லட்சம் அபராதம் விதித்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.

அரியலூரில் காந்தி நகரில் வசித்து வரும் கணேசன் -  மணிமேகலை தம்பதியின் மகள் எழில்செல்வி.  வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த பிரபாகருக்கும், எழில் செல்விக்கும்  கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.  அவருக்கு குழந்தை பிரசவத்திற்காக அரியலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தொடர் மருத்துவ ஆலோசனை பெற்று வந்துள்ளனர்.  

கடந்த 28-03-2018-ம் தேதி எழில்செல்விக்கு பிரசவ வலி ஏற்பட்டு அந்த  மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு குழந்தை பிறந்துள்ளது. அப்போது  அவரின் உடலில் இருந்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் ரத்தப்போக்கு நிற்கவில்லை. 

இந்நிலையில் மகப்பேறு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்,  ரத்தப்போக்கு தொடர்ந்தால்  அவருக்கு உயிருக்கு ஆபத்து நேரிடும் என்று தெரிவித்துள்ளார். இதன்பின்பு உயர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர்  அழைத்துச் செல்லப்பட்டார்.  அங்கு  எழில்செல்விக்கு ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த அறுவை சிகிச்சையின் மூலம் அவரது கர்ப்பப்பை நீக்கப்பட்டுள்ளது. 

மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் பலனின்றி அன்று மாலை அவர் இறந்துவிட்டார். அரியலூரில் மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சையை சரிவர செய்யாததால் தமது மகள் இறந்துவிட்டார் என எழில் செல்வியின் பெற்றோர் கடந்த 2018-ம் ஆண்டு அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மருத்துவர் மீதுவழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இதனை விசாரித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு மருத்துவரின் அஜாக்கிரதையால் எழில்செல்வி இறந்து விட்டார் என்று புகார்தாரர்கள் நிரூபித்துள்ளனர். இதனால் பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவர் இறந்த எழில்செல்வியின் ஐந்து வயது மகளுக்கு ரூ 12.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும்,  இந்த தொகை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் இறந்தவரின் பெற்றோர்களைக் காப்பாளர்களாகக்  கொண்டு டெபாசிட் செய்ய வேண்டுமென்றும் இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in