மாடித்தோட்டம் அமைக்கும் இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: தோட்டக்கலைத்துறை அறிவிப்பு

மாடித்தோட்டம் அமைக்கும் இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: தோட்டக்கலைத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகளுக்கு வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித் தோட்டம் அமைக்கும் இல்லத்தரசிகளுக்குத் தேவையான விதைகள், அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் தயாராக இருப்பதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளனர்.

தமிழ் மாதம் பன்னிரென்டில் பூமிக்கு முதல் மழையைக் கொண்டு வந்து, ஆறுகளில் புது வெள்ளம் பாயும் மாதம் ‘ஆடி' மாதமாகும். இது பயிர்களுக்கு புதிய விளைச்சலை கொண்டு வர ஏதுவாக இருக்கும் என்று விவசாயிகள் நம்புகின்றனர். ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாயம் செய்தால், தை மாதம் முதல் அறுவடை செய்ய துவங்கலாம். பயிர்களுக்குத் தேவையான சூரிய ஒளியும், நல்ல மழையும் கிடைத்து விவசாயிகளுக்கு சிறப்பான அறுவடையைக் கொடுக்கும் மாதமும் ஆடி மாதம் தான்.

கடுமையான கோடைக் காலத்தைச் சந்தித்த விளைநிலம் இறுகி கடினமாக மாறியிருக்கும். ஆடி மாதம் முதல் பெய்யக்கூடிய மிதமான மழையினால் மண்ணின் ஈரப்பதத்தில் நுண்ணுயிர்கள், மண்புழு, நன்மை செய்யும் பாக்டீரியாக்கள், மண்ணை வளப்படுத்தும் பூச்சிகள் உருவாக தொடங்கும். இப்படி மண்வளத்தைப் பாதுகாக்கும் சிறு பூச்சிகள் முதல் பயிர்களைக் காக்கும் சூரியன் வரை ஆற்றலாக செயல்படுவதால். இம்மாதம் விளைச்சலுக்கு ஏற்ற மாதமாக அமைகிறது.

அதனால், தற்போது தமிழகம் முழுவதும் ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி தொடங்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில் ஆடி மாதத்தை பொறுத்த வரை ஆண்டுதோறும் சராசரியாக 1,040 ஹெக்டர் பரப்பில் காய்கறிப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இம்மாதத்தில் அவரை கத்தரி, தக்காளி, மிளகாய், கொடிவகைகள், கீரைகள் போன்ற காய்கறி பயிர்களும் வாழையும் புதிதாக நடவு செய்யப்படுகிறது.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ரேவதி கூறுகையில், ‘‘ஆண்டுதோறும் ஆடிப்பட்ட காய்கறி சாகுபடியினை ஊக்குவிக்கவும், பரப்பினை அதிகரிக்கவும் தோட்டக்கலைத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நடப்பாண்டிலும் ஆடிப்பட்ட காய்கறி சாகுபடிக்கான விதை பாக்கெட்டுகள் வரும் வரும் புதன்கிழமை 3-ம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளது. இது வீட்டுத்தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அமைக்கும் இல்லத்தரசிகளுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்.

விவசாயிகளுக்கு ஆடிப்பட்ட காய்கறி சாகுபடிக்கு தேவையான குழித்தட்டு நாற்றுகள் அரசு தோட்டக்கலை பண்ணை, பூஞ்சுத்தி மற்றும் பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையம், திருப்பரங்குன்றத்தில் தயார் நிலையில் உள்ளது. தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ், வீரிய ஒட்டு இரக காய்கறி சாகுபடி இனத்தின் கீழ் அந்தந்த வட்டார, தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் உரிய நில ஆவணங்களைக் கொடுத்து பதிவு செய்து மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம்" என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in