சிறுமலையில் மலைவாழ் மக்கள் கொண்டாடிய குதிரைப்பொங்கல்!

சிறுமலையில் மலைவாழ் மக்கள் கொண்டாடிய குதிரைப்பொங்கல்!

தங்களுக்கு உதவிய குதிரைகளின் உழைப்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் குதிரைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலைப் பகுதியில் மலைப்பகுதியில் சவ் சவ், எலுமிச்சை, அவரை, காப்பி, ஏலக்காய் உள்ளிட்டவை விளைவிக்கப்படுகிறது. சிறுமலைப் பகுதி விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்குத் தேவையான இடுபொருட்களைத் தோட்டப்பகுதி கொண்டு செல்லவும், அதேபோல் விளைவித்த காய்கறிகள் உள்ளிட்டவைகளை விற்பனைக்கு அனுப்ப கொண்டுவரவும் குதிரைகளைப் பயன்படுத்துகின்றனர். பாரத்தைச் சுமந்துகொண்டு மேடான மலைப்பகுதிகளில் ஏறி இறங்கி விவசாயிகளுக்கு உதவியாக குதிரைகள் செயல்பட்டு வருகின்றன.

இதனால் மலைங்ககிராமங்களில் விளைநிலங்கள் வைத்திருக்கும் வீடுகளில் குதிரைகளை வளர்த்துவருகின்றனர். தமிழகத்தின் பிற பகுதிகளில் விவசாயிகளின் நண்பனாக விளங்கும் மாடுகளுக்கு மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுவது போல், மாட்டுப்பொங்கல் அன்று சிறுமலை பகுதியில் ஆண்டுதோறும் தங்களுக்காக உழைக்கும் குதிரைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குதிரைப்பொங்கல் கொண்டாடுகின்றனர்.

திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலை பகுதியில் உள்ள பழையூர், வேளாம்பண்ணை, தாளக்கடை, கடமான்குளம், அகஸ்தியர்புரம், தென்மலை, புதூர் உள்ளிட்ட பல மலைகிராமங்களில் நேற்று குதிரைப்பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

தங்களின் விவசாயத்திற்குஉறுதுணையாக இருக்கும் குதிரைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், குதிரைகளைக் குளிப்பட்டி அதற்கு பொட்டு வைத்து அலங்கரித்து, மாலையிட்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். குதிரைக்கு பொங்கல் ஊட்டி மகிழ்ந்தனர். முன்னதாக மலைக்கிராமமக்கள் தங்கள் குதிரைகளை ஒன்று சேர்த்து ஊர்வலமாக அழைத்துச்சென்றனர். குதிரைப்பொங்கலை முன்னிட்டு குதிரைகளை சுதந்திரமா மேயவிட்டனர். எந்த வேலையும் கொடுக்காமல் குதிரைக்கு முழு ஓய்வு கொடுத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in