945 நாள் கழித்து முகக்கவசத்துக்கு விடை தந்தது ஹாங் காங்!

முகக்கவசத்துடன் ஹாங் காங் மக்கள்
முகக்கவசத்துடன் ஹாங் காங் மக்கள்

கரோனா அச்சத்தின் பிடியிலிருந்து உலகம் முழுமையாக விடுபடுவதன் அடையாளங்களில் ஒன்றாக, 945 நாட்களாக பீடித்திருந்த முகக்கவச கட்டாயத்துக்கு விடை தந்திருக்கிறது ஹாங் காங்.

சீனாவின் சிறப்பு நிர்வாகப் பிரிவுகளில் ஒன்றாக அடங்கும் ஹாங் காங், ’ஆசியாவின் நகரம்’ என்றழைக்கப்படும் அளவுக்கு பொருளாதாரத்திலும், சுற்றுலாவிலும் முன்னேறி இருந்தது. ஆனால் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகை படுத்தி வந்த கரோனா காரணமாக, ஹாங் காங்கின் சுற்றுலாத் துறை வெகுவாய் படுத்துவிட்டது. கரோனா பரவல் குறித்தான அச்சம் மட்டுமன்றி, கரோனா கட்டுப்பாடுகள் என்ற பெயரில் ஹாங் காங் நிர்வாகம் விதித்த கடுமையான நடைமுறைகளும் சுற்றுலாத் துறையை நசியச் செய்தன.

அவற்றில் ஒன்று முகக்கவசம் கட்டாயம் என்ற நடைமுறை. வீட்டின் உள்ளே, வெளியே, அலுவலகம், பயணம் என எங்கே சென்றாலும் முகக்கவசம் கட்டாயம் என்றது ஹாங் காங். முகக்கவசம் அணியாதவதர்களுக்கு உச்ச அபராதங்கள் விதிக்கப்பட்டன. இவை ஹாங் காங் மக்களைவிட சுற்றுலாவாசிகளை அதிகம் சோதித்தன. கடந்த சில மாதங்களாகவே சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தபோதும், முகக்கவச கட்டாய நடைமுறைகளால் அவை தத்தளிப்புக்கு ஆளாயின.

சுற்றுலாப்பயணிகள் மட்டுமன்றி நகரின் கடுமையான கரோனா சட்டங்களால் கசப்படைந்த மக்களில் பலரும் இதர நகரங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றிருக்கின்றனர். இந்த வகையில் கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் ஹாங் காங் நகரை விட்டு விலகி உள்ளனர். எனவே ஹாங் காங் நிர்வாகம் ஒருமனதாக முகக்கவசத்துக்கு விடை தர முடிவு செய்தது. அதன்படி 2020-ம் ஆண்டின் மத்தியில் முகக்கவசம் நடைமுறை அமலானதிலிருந்து 945 நாட்கள் கழித்து முகக்கவசத்துக்கு ஹாங் காங் விடை தந்திருக்கிறது. இதன் மூலம் சுற்றுலாத்துறை இயல்புக்கு திரும்பும் எனவும் அது கணித்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in