எகிறும் பெட்ரோல் விலை: இனி இப்படியும் நடக்கலாம்..

தங்கள், வெள்ளி வரிசையில் சேரும் பெட்ரோல்!
எகிறும் பெட்ரோல் விலை: இனி இப்படியும் நடக்கலாம்..

’வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள், இருசக்கர வாகனத்தின் பெட்ரோலை திருடிச் சென்றனர். பெட்ரோல் திருடர்களை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்..’

இது ஜோக் அல்ல. எகிறும் பெட்ரோல் விலை காரணமாக இனி இப்படியும் நடக்கும் என்று பொட்டில் அடித்து உணர்த்தும் அவல செய்தி.

மெய்யாலுமே இப்படியொரு சம்பவம் பழநியில் நடந்தேறி இருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி திருநகரில் வசிப்பவர்கள் சந்திரசேகர் - கனகா தம்பதி. இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தனர். பூட்டிக் கிடக்கும் வீடாக நோட்டமிட்டு கன்னம் வைக்கும் மர்ம கும்பல் ஒன்று சந்திரசேகர் வீட்டுக்கும் குறி வைத்தது,

அதன்படி, அந்த மர்ம கும்பல் நேற்று நள்ளிரவு சந்திரசேகர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தது. நேராக பீரோவின் பூட்டை உடைத்து துழாவியது. சந்திரசேகர் - கனகா தம்பதியின் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக, பீரோவில் திருடர்களுக்கு ஏதும் சிக்கவில்லை.

நம்பிக்கை இழக்காத திருடர்கள், வீட்டின் இண்டு இடுக்கெல்லாம் தேடிப்பார்த்து சோர்ந்தனர். நகை, ரொக்கம் என எதிர்பார்த்து வந்தவர்கள் கடும் ஏமாற்றத்துக்கு உள்ளானார்கள். சில தினங்களாக மோப்பமிட்டு, நள்ளிரவுக்காக விழித்திருந்து, வீடு மற்றும் பீரோ என பூட்டுகளை எல்லாம் உடைத்து, திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட திருடர்களால் தங்கள் ஏமாற்றத்தை ஜீரணிக்கவே முடியவில்லை.

வீட்டை விட்டு வெளியேறும் போதுதான் அங்குள்ள விலை மிகுந்த பொருள் திருடர்களை உறுத்தியது. அதன்படி, வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் எரிபொருள் முழுதுமாக உறிஞ்சியெடுத்து சென்றனர். அடுத்த நாள் வீடு திரும்பிய சந்திரசேகர் - கனகா தம்பதி, பூட்டை உடைத்து வீட்டினுள் திருடர்கள் வந்து சென்றதை அறிந்தனர். மேலும் விலை உயர்ந்த பெட்ரோல் திருடு போயிருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.

உடனடியாக பழநி காவல் நிலையம் சென்ற சந்திரசேகர், பெட்ரோல் கொள்ளை போனது குறித்து புகாரளித்தார். களத்தில் இறங்கிய பழநி போலீஸாரும், அப்பகுதியின் சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் வீடு புகுந்து பெட்ரோல் திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

உயரும் எரிபொருள் விலைக்கேற்ப, பெட்ரோல் திருடர்களின் கைவரிசையும் அதிகரிக்கக் கூடும். எனவே மகாஜனங்களே பெட்ரோல் பத்திரம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in