கடைகளில் மாற்றப்பட்ட க்யூஆர் கோடு; லட்சக்கணக்கில் சுருட்டிய ஊர்காவல்படை காவலர்: பதறிப்போன வியாபாரிகள்

கடைகளில் மாற்றப்பட்ட க்யூஆர் கோடு; லட்சக்கணக்கில் சுருட்டிய ஊர்காவல்படை காவலர்: பதறிப்போன வியாபாரிகள்

சென்னையில் கடைகளில் ஒட்டியுள்ள க்யூஆர் கோடை மாற்றி நூதன முறையில் லட்சக்கணக்கில் கொள்ளையடித்து வந்த ஊர்காவல்படை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை துரைப்பாக்கம் ஒக்கியம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த்(39). இவர் அதே பகுதியில் பல மாதங்களாக டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் பெறுவதற்காக இவரது வங்கி கணக்குடன் இணைந்த பேடிஎம் க்யூஆர் கோடு ஸ்டிக்கர் ஒன்றை கடையில் ஒட்டி வைத்துள்ளார். சில நாட்களாக வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணம் இவரது வங்கி கணக்கிற்கு வராமல் இருப்பதால் சந்தேகமடைந்த ஆனந்த, இது குறித்து வங்கிக்கு சென்று கேட்டுள்ளார். அப்போது வங்கி ஊழியர்கள் உங்கள் கணக்கில் கடந்த சில நாட்களாக எந்த பணம் வரவில்லை என கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆனந்த் வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணம் எங்கு சென்றது என்பது தெரியாமல் குழம்பி நின்றார். பின்னர் இந்த மோசடி குறித்து ஆனந்த், கடந்த 3-ம் தேதி கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று ஆனந்த் டிபன் கடையில் ஒட்டி வைத்திருந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து சிறிய தொகையை அனுப்பியுள்ளனர். ஆனால் பணம் உரிமையாளர் ஆனந்த் வங்கி கணக்கிற்கு செல்லவில்லை. இதனால் சந்தேமடைந்த போலீஸார் பணம் சென்ற வங்கி கணக்கை ஆய்வு செய்த போது ஸ்ரீதர் என்பவருடைய வங்கி கணக்கிற்கு பணம் சென்றதை கண்டுபிடித்தனர். இதையடுத்து பணம் சென்ற வங்கி கணக்கு எண்ணை வைத்து முகவரியை போலீஸார் கண்டுபிடித்தனர். பின்னர் மோசடியில் ஈடுபட்ட கண்ணகி நகரை சேர்ந்த ஸ்ரீதர்(21) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல் வெளியானது. ஸ்ரீதர் திருவான்மியூரில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருவது தெரியவந்தது. மேலும் மோசடி செய்வதற்காக சென்னை காவல்துறையில் காவலராக பணிபுரிவது போல் போலியான அடையாள அட்டை தயாரித்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் தனது வங்கி கணக்கை இணைத்து பாரத் பே என்ற க்யூஆர் கோடை தயார் செய்து டிபன் கடை, ஸ்டேஷ்னரி, ஹோட்டல் போன்ற கடைகளுக்கு சென்று உரிமையாளர்களின் கவனத்தை திசை திருப்பி, அவர்கள் ஒட்டியுள்ள க்யூஆர் கோட்டிற்கு மேலே இவரது க்யூஆர் கோடை ஒட்டி மோசடியில் ஈடுபட்டதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

மேலும் அந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பொருளுக்கு உண்டான பணத்தை க்யூஆர் கோடு மூலமாக அனுப்பும் போது, பணம் ஸ்ரீதரின் வங்கி கணக்கில் சென்றதும் இதன் மூலமாக லட்சக்கணக்கில் சம்பாதித்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 15 நாட்களில் கடை உரிமையாளர்களுக்கு தெரியாமல் 7 கடைகளில் தனது க்யூஆர் கோடு ஒட்டி மோசடியில் ஸ்ரீதர் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது. இதையடுத்து மோசடி, போலி ஆவணத்தை புனைதல், ஐடி பிரிவு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஸ்ரீதர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in