தாக்கும் வெப்ப அலை; தாக்குப்பிடிக்குமா தமிழகம்?

வெப்பம்
வெப்பம்தாக்கும் வெப்ப அலை; தாக்குப்பிடிக்குமா தமிழகம்?

ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இயல்பாகவே அதிகமாக இருக்கும். "உச்சி வெயிலில் வெளியே போகாதே" என வீட்டில் உள்ள பெரியவர்கள் நம்மை எச்சரிப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு, “பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள்” என்று இப்போதே எச்சரிக்கிறது அரசு. அந்தளவுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு வெயிலின் தகிப்பு அதிகரிக்கப் போகிறது. ”இந்த ஆண்டு தமிழகத்தின் கடலோர பகுதிகளில் ’வெப்ப அலைகள்’ அதிகம் வீசலாம்” என இந்திய வானிலை ஆராய்சி மையமும் அபாயச் சங்கு ஊதி இருக்கிறது.

’வெப்ப அலைகள்’ என்றால் என்ன?

சமவெளிப் பகுதியில், குறைந்தது இரண்டு நாட்களுக்கு 40° செல்சியஸ் அல்லது அதற்கு மேலாகவும், மலைப் பிரதேசங்களில் 30° செல்சியஸ் அல்லது அதற்கு மேலாகவும், கடலோரப் பகுதிகளில் 37° செல்சியஸ் அல்லது அதற்கு மேலாகவும் வெப்பநிலை உயரும்போது ’வெப்பஅலை’ நிகழ்வு ஏற்பட்டதாகக் கருதப்படும். தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளில், சராசரியாக ஆண்டுக்கு 8 வெப்ப அலைகள் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள் வானிலை ஆராய்ச்சியாளர்கள்.

வெப்ப அலைகளால் தமிழகம் பல பாதிப்புகளை சந்தித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு தமிழகத்திற்கு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. தமிழக அரசே வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கும் நிலை ஏற்பட்டது. கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வறட்சிக்கு பலியானதாக தகவல்கள் வெளியாகின.

வெப்ப அலைகளின் காலம் அதிகரிக்கும் போதும், தீவிரமடையும் போதும் வறட்சியும் அதிகரிக்கும். வெப்ப அலைகளுக்கு மத்தியில் மழை பொழிவுகள் குறையும். எனவே, நிலத்தில் உள்ள ஈரப்பதம் மற்றும் நீர் விநியோகம் விரைவில் தீர்ந்து வறண்டு போகும். ஆக, நிலம் அதிவிரைவாக வெப்பமடைந்து காற்றை சூடேற்றும். இது ஒரு தொடர் சுழற்சியாகி ஒட்டுமொத்த வெப்ப நிலையும் அதிகரிக்கும். இதனால் தண்ணீீர் பற்றாக்குறை ஏற்படும்.

உலக நாடுகள் பலவற்றையும் இந்த வெப்ப அலைகள் போட்டுத் தாக்கி இருப்பதாகச் சொல்கின்றன ஆய்வுகள். கடந்த ஆண்டு கொரோனா லக்டவுனுக்கு இணையான ஒரு காலகட்டத்தை வெப்ப அலைகளால் இங்கிலாந்து சந்தித்தது. அந்த சமயத்தில் ’தேசிய அவசரநிலை’யை பிரகடனம் செய்து ஒட்டு மொத்த மக்களையும் முடக்கிப் போட்டது அரசு நிர்வாகம்.

கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதால் ஒரு நாளைக்கு ஒரு நபர் 3 முதல் 5 தண்ணீர் பாட்டில்களை மட்டுமே வாங்க முடியும் என்ற நிலை உருவானது. அதேபோல 2022-ல் மட்டும் ஜெர்மனியில் கிட்டத்தட்ட 8 ஆயிரம் பேர், ஸ்பெயினில் 2,064 பேர் வெப்ப அலை பாதிப்புகளால் உயிரிழந்தனர்.

வெப்ப அலைகள் குறித்து தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜனிடம் இதுகுறித்துப் பேசினோம்.

’’மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஏற்படும் காட்டுத்தீ இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஏற்பட்டது. இது எங்களைப் போன்ற சூழலியல் செயற்பாட்டாளர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் டிசம்பர் 2-வது வாரம் வரைக்குமே அந்தப் பகுதிகளில் மழைப் பொழிவு இருந்தது.

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்
பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்தாக்கும் வெப்ப அலை; தாக்குப்பிடிக்குமா தமிழகம்..!

சென்னையில் இப்போதே மே மாதத்தில் அடிக்கும் கத்திரி வெயில் போல் வெப்பம் தகிக்கிறது. திடீரென பனி பொழிகிறது. திடீரென வெயில் அதிகரிக்கிறது. திடீரென மழை பொழிகிறது. இதற்கெல்லாம் புவி வெப்பமாதலால் ஏற்படும் ’எல் - நினோ’ பாதிப்பு தான் காரணம். ‘எல் - நினோ’ பாதிப்புகளால் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகை பகுதியில் வெப்ப நிலை உயரக்கூடும். அப்படி அதிகரித்தால் இந்தியாவில் உள்ள ஈரப்பதத்தை அது இழுக்கலாம். அதனால் இந்தியாவில் மேலும் வெப்பம் அதிகரித்து வறட்சி அதிகரிக்கக் கூடும். அதன் தாக்கம் நிச்சயமாக தமிழகத்திலும் இருக்கும்.

ஏப்ரல், மே மாதங்களில் நிச்சயமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெப்ப அலைகள் வீசக் கூடும் என்பது உண்மைதான். இந்தியாவைத் தவிர்த்து பல நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. ஏன், கடந்த ஆண்டுகூட வட மாநிலங்கள் வெப்ப அலைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டன.

இதனை எதிர்கொள்ள இப்போதே நாம் தயாராக வேண்டும். தமிழகத்தில் கடலோரா பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடங்களில் குளிரூட்டி (ஏ.சி) வசதியை ஏற்படுத்தி, வெப்பத்தை தாங்க முடியாத சூழலில் உள்ளவர்களை பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அங்கே தங்கவைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார் அவர்.

எல் - நினோ
எல் - நினோதாக்கும் வெப்ப அலை; தாக்குப்பிடிக்குமா தமிழகம்..!
வானிலை ஆய்வு மையத் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன்
வானிலை ஆய்வு மையத் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன்அதிகரிக்கும் அதிகாலை பனிமூட்டம்; காரணம் என்ன..?

’வெப்ப அலைகள்’ குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரனிடம் பேசினோம்.

’’ வெப்ப அலைகள் குறித்து பெரிதாக பதற்றப்படத் தேவையில்லை. ஆண்டு தோறும் நமக்கே தெரியாமல் இதனை நாம் எதிர்க்கொண்டுதான் வருகிறோம். ஆனால் இந்த ஆண்டு, அதன் தாக்கம் சற்று கூடுதலாக இருக்கும் என்பது உண்மைதான். குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் இதன் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். அதற்காகத்தான் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இதனால் இயற்கை பேரிடர்கள் ஏதும் ஏற்படுமா என்பதை முன்பே கூற முடியாது. அரசாங்கம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தாலே இந்த வெப்ப அலையை எளிதாக சமாளித்து விடலாம்’’ என்றார் அவர்.

அடிக்கடி தண்ணீர் குடித்தல்...
அடிக்கடி தண்ணீர் குடித்தல்...தாக்கும் வெப்ப அலை; தாக்குப்பிடிக்குமா தமிழகம்?

இந்த வெப்ப அலைகளின் தாக்கத்தால் பக்கவாதம் உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சினைகள் வரக்கூடும் என எச்சரிக்கும் மருத்துவர்கள், “அடிக்கடி தண்ணீர் குடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை நாம் கடைபிடித்தாலே இதிலிருந்து எந்த பாதிப்பும் இல்லாமல் மீண்டுவிடலாம்” என்கிறார்கள்.

தேவைக்கு அதிகமாகவும் அவசியம் இல்லாமலும் இயற்கையை சுரண்டுவதாலும் தீண்டுவதாலும் கொந்தளிக்கும் இயற்கை அதை நமக்கு பல்வேறு வழிகளில் வெளிக்காட்டி வருகிறது. அப்படியான ஒன்றுதான் இந்த வெப்ப அலை சமாச்சாரமும். இதிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்போம்; அச்சமின்றி வெப்ப அலைகளைக் கடப்போம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in