மொஹரம் பண்டிகையை கொண்டாடிய இந்துக்கள்: சிவகங்கையில் மத நல்லிணக்கத் திருவிழா!

திருவிழாவிற்காக தயார் செய்யப்பட்ட பூக்குழி
திருவிழாவிற்காக தயார் செய்யப்பட்ட பூக்குழி

மொஹரம் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே இந்து மக்கள் பூக்குளி இறங்கியும், பூ முழுகியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள முதுவன் திடலில் பல ஆண்டுகளுக்கு முன்பு வசித்த பாத்திமா நாச்சியாரின் நினைவாக கிராமத்தின் மையப் பகுதியில் தர்கா அமைத்து அவரை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் மொஹரம் தினத்தன்று அவரை நினைவு கூறும் வகையில் 10 நாட்களுக்கு திருவிழா நடத்தி, கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நேர்த்திக்கடன் செலுத்துவதும் படையல் எடுப்பதும் வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழாவிற்காக கடந்த 31-ம் தேதி கொடியேற்றப்பட்டது. ஐந்தாவது நாள் மொஹரம் சிறப்பு பிரார்த்தனை, ஏழாவது நாள் நிகழ்ச்சியில் சாமி அலங்காரம் செய்து வீதி உலா நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை 10 அடி நீளம், 4 அடி அகலத்தில் பூக்குளி அமைத்து, அதில் பொதுமக்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதனையடுத்து பூ முழுகுதல் என்ற தீக்கங்கு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பங்கேற்ற பெண்கள் தங்கள் தலையை ஈரத் துணியால் போர்த்தி அதில் மூன்று முறை தீர்க்கங்குகளை போட்டுக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன் பின்னர் திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தை மேளதாளத்துடன் கிராம எல்லை வரை தூக்கிச்சென்ற பொதுமக்கள் மீண்டும் தர்காவில் கொண்டு வந்து சேர்ந்தனர்.

பூ முழுகுதல்
பூ முழுகுதல்

இது குறித்து முதுவன் திடல் கிராமத்தினர் கூறும்போது, "200 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்த இஸ்லாமியர்கள் வேலை தேடி வெளியூர் சென்றுவிட்டனர். அவர்களைத் தொடர்ந்து, இந்த ஊரில் அதிகமாக இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும், இங்கு வாழ்ந்த பாத்திமா நாச்சியார் என்பவரை தெய்வமாக கருதி ஒவ்வொரு ஆண்டும் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகிறோம்.

மேலும், இந்த கிராமத்தில் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் நெல்லை முதலில் அறுவடை செய்து பாத்திமா நாச்சியாருக்கு (குள தெய்வம்) தான் படி அளப்போம். முதலில் அறுவடை செய்து வரக்கூடிய நெல்லை விற்று அதில் கிடைக்கக்கூடிய வருமானத்தை வைத்து பிரார்த்தனை செய்த பிறகு தான் நாங்கள் சமைத்து சாப்பிடுவோம். இதனை எங்கள் மூதாதையர் காலத்தில் இருந்து தொன்று தொட்டு செய்து வருகிறோம்" என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in