லட்சக்கணக்கில் குவிந்த புகார்; பணிந்தனர் தீட்சிதர்கள்: நடராஜர் கோயிலில் நகைகள் சரிபார்ப்பு பணியை தொடங்கியது அரசு!

ஆய்வுப் பணியில் அதிகாரிகள்
ஆய்வுப் பணியில் அதிகாரிகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் கடும் எதிர்ப்பினால் கோயில் நகைகள் உள்ளிட்ட வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்ய முடியாமல் இருந்த தமிழக இந்து சமய அறநிலைத்துறையினர், தீட்சிதர்களின் சம்மதத்தின் பேரில் இன்று கோயிலுக்கு வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

கோயிலுக்குள் அதிகாரிகள் குழு
கோயிலுக்குள் அதிகாரிகள் குழு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருச்சிற்றம்பலம் எனும் பொன்னம்பல மேடையில் ஏறி பக்தர்கள் வழிபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் அதனை எதிர்த்து பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து சிற்றம்பலத்தில் ஏறி பக்தர்கள் வழிபடலாம் என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து கோயில் வரவு, செலவு உள்ளிட்டவற்றை அரசாங்கம் சரி பார்க்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளின் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதனையேற்று அறநிலையத்துறை சார்பில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கோயில் தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு கோயில் தீட்சிதர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினர். ஆனாலும் இந்து சமய அறநிலையத் துறையின் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் கோயிலில் இருக்கும் நகைகளை ஆய்வு செய்வதற்காக கோயிலுக்கு நேரில் வந்தனர். இதற்கு கோயில் தீட்சிதர்கள் அனுமதி மறுத்ததால் அதிகாரிகள் ஆய்வு செய்ய முடியாமல் திரும்பிச் சென்றனர்.

பின்னர் நடராஜர் கோயில் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேலான புகார்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்களால் பதிவு செய்யப்பட்டது. அவற்றை கையிலெடுத்து உரிய விசாரணை நடத்த அறநிலையத்துறை முடிவு செய்திருந்தது. இதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 22-ம் தேதியன்று ஆய்வு செய்ய வரலாம் என கோயில் தீட்சிதர்கள் தரப்பில் அனுமதி தெரிவித்திருந்தனர்.

அதன்பேரில் இன்று காலை இந்து சமய அறநிலைத்துறையின் திருவண்ணாமலை கோயில் இணை ஆணையர் குமரேசன், கடலூர் மாவட்ட இணை ஆணையர் ஜோதி, விழுப்புரம் சிவலிங்கம், திருச்சி தர்மராஜன், திருவண்ணாமலை கோயில் நகை மதிப்பீட்டு வல்லுநர் குமார், விழுப்புரம் குருமூர்த்தி அடங்கிய அலுவலர்கள் 10 பேர் கொண்ட குழுவினர் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வருகை தந்தனர்.

அவர்களை வரவேற்று அழைத்துச் சென்ற கோயில் தீட்சிதர்கள், பின்னர் கோயில் நகைகளை அவர்களிடம் ஆய்வுக்கு ஒப்படைத்தனர். அதனையடுத்து நகைகள் ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியது. இந்நிகழ்வுக்கு பத்திரிகையாளர்கள் வரக்கூடாது என தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in