`ஆங்கில புத்தாண்டில் நள்ளிரவில் கோயில்களை திறந்தால் முற்றுகை'- எச்சரிக்கும் இந்து மக்கள் கட்சி

`ஆங்கில புத்தாண்டில் நள்ளிரவில் கோயில்களை திறந்தால் முற்றுகை'- எச்சரிக்கும் இந்து மக்கள் கட்சி

``இன்று  நள்ளிரவு புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு தமிழகத்தில் கோயில்களைத் திறந்தால் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது. 

இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில். `புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் கலாச்சார, பண்பாட்டு சீரழிவு நடைபெறுகிறது. நள்ளிரவில், நடு வீதியில் குடித்துவிட்டு கும்மாளமிடும் கேடுகெட்ட செயல்கள் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. இதற்கெல்லாம் மேலாக நள்ளிரவில் இந்து கோயில்கள் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுவது கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோயில்கள் அதிகளவில் திறக்கப்படுகின்றன. தேவாரம் பாடப்பட்ட திருக்கோயில்களெல்லாம் இன்று வியாபார கோயில்களாகி விட்டன. அண்டை மாநிலமான ஆந்திர பிரதேச அரசாங்கம் கோயில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுகள் தேவையில்லை என உத்தரவிட்டுள்ளது.  இது தொடர்பாக அனைத்து கோயில் நிர்வாக அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் "யாருக்காகவும், எந்த விதமான சிறப்பு பூஜைகளும் ஜனவரி 1 அன்று நடத்த வேண்டிய அவசியமில்லை" என கூறப்பட்டுள்ளது.

சுவாமிநாதன்
சுவாமிநாதன்

இதனைப் பின்பற்றி தமிழக அரசும் டிசம்பர் 31 நள்ளிரவில் கோயில்கள் திறக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இதனை இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு கோயில்கள் நள்ளிரவில் திறக்கப்படாது என்பதனை உறுதி செய்ய வேண்டும். தனியார் நிர்வாகத்தின் கீழ் உள்ள முக்கியமான பெரிய கோயில்களிலும் இந்த நடைமுறையை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். 

நள்ளிரவில் கோயில்கள் திறக்கப்படுவது ஆகம விதிகளுக்கு புறம்பானது. டிசம்பர் 31, ஆங்கில புத்தாண்டையொட்டி அகால வேளையில் கோயில்கள் திறக்கப்படுமானால் பக்தர்கள், பெண்கள், துறவிகள், சமய பெரியவர்களை ஒன்று திரட்டி, கோயில்கள் மற்றும் அறநிலையத் துறை அலுவலகங்கள் முன்பு  இந்து மக்கள் கட்சியின் சார்பில்  முற்றுகை போராட்டம் நடத்தப்படும்' என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in