தூத்துக்குடி மாவட்டத்தில் வட இந்தியத் தொழிலாளர்களின் பிரச்சினைகளைக் களையும் வகையில் காவல்துறை சார்பில் பிரத்யேக செல்போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காவலர் இந்தியிலேயே பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தூத்துக்குடி எஸ்.பி பாலாஜி சரவணன் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் ஏராளமான வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கி வேலைசெய்து வருகின்றனர். அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் பிரத்யேகமாக இந்தியில் பேசும் காவலரை பணி அமர்த்தி உள்ளோம். அவர் வடமாநிலத் தொழிலாளர்களிடம் இந்தியிலேயே பேசி, அவர்களின் பிரச்சினைகளை அறிந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும், உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுப்பார்.
இதேபோல் இந்த பிரிவுக்கு 8249331660 என்ற பிரத்யேக செல்போன் எண்ணையும் அறிவித்துள்ளோம். வட மாநிலத் தொழிலாளர்கள் இந்த எண்ணுக்கு அழைத்து விஷயத்தைச் சொன்னால் சம்பந்தப்பட்ட காவலர்கள் நேரடியாகவே தேடிவந்து உதவுவார்கள். இதனால் வடமாநிலத் தொழிலாளர்கள் துளியும் அச்சம்கொள்ளத் தேவை இல்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வட மாநிலத் தொழிலாளர்கள் வேலைசெய்யும் பகுதிகளுக்கு அவர், அவர்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் நேரில்போய் அவர்களின் குறைகளையும் கேட்டு வருகின்றனர். வட மாநிலத் தொழிலாளர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய தூத்துக்குடி மாவட்ட காவல்துறை 24 மணிநேரமும் தயாராகவே உள்ளது ”என்றார்.