'அவரது தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறேன்': கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்துபோன 'மூன்று முடிச்சு' சீரியல் நடிகை

'அவரது தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறேன்': கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்துபோன 'மூன்று முடிச்சு' சீரியல் நடிகை

'மூன்று முடிச்சு' சீரியல் மூலம் பிரபலமான நடிகை வைஷாலி தக்கர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது இந்தி திரையுலகத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் வைஷாலி தக்கர்(29). இவர் கடந்த 2016-ம் ஆண்டு 'ராஜன் ஷாஹி' என்ற இந்தி சீரியல் மூலம் அறிமுகமானார். 'சசுரால் சிமர் கா' என்ற சீரியலில் இவர் நடிப்பிற்கு ஏகோபித்த பாராட்டுக்கள் கிடைத்தன. மேலும் 'யே ரிஷ்தா க்யா கெஹலாத்தா', 'யே வாதா ரஹா', 'யே ஹை ஆஷிகி’ போன்ற இந்தித் தொடர்களிலும் நடித்துள்ளார். பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல தொடர் 'மூன்று மூடிச்சு'. இந்தியில் இருந்து தமிழில் டப் செய்யப்பட்ட இந்தத் தொடரில் நடித்த இந்தி நடிகை வைஷாலி தக்கருக்குத் தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் உண்டு.

இவர் கடந்த ஒரு வருடமாக இந்தூரில் தந்தை மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார். இவருக்கும், கென்யாவில் வசித்துவரும் மருத்துவர் அபிநந்தன் சிங் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சில காரணங்களால் அந்த திருமணம் நின்றுபோனது. இந்த நிலையில் திடீரென தூக்கில் தொங்கிய நிலையில் அவரது வீட்டில் வைஷாலி நேற்று சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், நடிகை வைஷாலி தக்கர் எழுதிய கடிதம் சிக்கியது. அதில், ‘முன்னாள் காதலர் ரொம்பவும் தொந்தரவு கொடுக்கிறார். அவரது தொல்லையைப் பொறுக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறேன்’ என்று எழுதியிருந்தது. இதையடுத்து அவரது முன்னாள் காதலரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை வைஷாலி தக்கர் தற்கொலை செய்துகொண்டது இந்தித் திரையுலகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in