மோடி பின்னணியில் அதானி; அதானி பின்னணியில் சீனா?

ராகுல் மற்றும் அதானி
ராகுல் மற்றும் அதானி

அதானி குழுமத்துக்கு எதிராக ஹிண்டர்பர்க் கிளப்பிய சர்ச்சை அத்தனை எளிதில் ஓயாது போலிருக்கிறது. தனக்கு கிட்டிய அலாவுதீன் அற்புத விளக்காக, ராகுல் சதா அதனை தேய்த்து புதிய பூதங்களை கிளப்பியபடியே இருக்கிறார். பிடிகொடுக்காத பிரதமர் மோடி கள்ளமவுனம் சாதிப்பதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார். அதிலும், அதானி குழுமத்துடனான சீனர்களின் பின்னணி குறித்து ராகுல் கேட்கும் கேள்விகளுக்கு மோடிக்கு மூச்சுமுட்டுகிறது.

அதானி நிறுவனம்
அதானி நிறுவனம்

அடாத ராகுல் விடாத வினாக்கள்

அதானி உடனான தொடர்பு குறித்து பிரதமர் மோடி விளக்க வேண்டுமென நாடாளுமன்றத்தைக் கிடுகிடுக்கச் செய்தார் ராகுல் காந்தி. அவரை வாயடைக்கச் செய்ய, சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் உறக்கத்திலிருந்த பிரதமர் மோடிக்கு எதிரான அவதூறு வழக்கை தூசு தட்டினார்கள். நீதிபதியை மாற்றி ஒரே மாதத்தில் விறுவிறு விசாரணை நடத்தியதில் வெளியான தீர்ப்பு, ராகுல் காந்தியை எம்பி பதவி இழப்புக்கு ஆளாக்கியது.

நாடாளுமன்றம் கதவடைத்தால் என்ன, மக்கள் மன்றத்தில் நின்று கேள்விகளைத் தொடர்வேன் என்று ராகுல் தொடர்ந்து கர்ஜிக்கிறார். அப்படி அவர் ரௌத்திர தாண்டமாடியதில் ஒரு விவகாரம் அதானி - மோடி நட்புக்கே வேட்டு வைக்கும் அளவுக்கு வளர்ந்து வருகிறது. அதானி நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பிலிருக்கும் சீன நிறுவனங்கள், குடும்ப உறுப்பினர்கள் போல அதானி முகவரியை தங்களுடையதாக பாவிக்கும் சீனர்கள், அவர்களுடனான அதானி குழுமத்தின் பல்லாயிரம் கோடி பணப்பரிமாற்றங்கள், மறைமுகமாக வழங்கப்பட்ட கட்டுமான ஒப்பந்தத் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ராகுல் கேள்வி எழுப்பி வருகிறார். இதனால் மோடிக்கு இன்னும் மூச்சு முட்டுகிறது.

சீனா - இந்தியா
சீனா - இந்தியா

எல்லையிலும், உள்ளேயும் வாலாட்டும் சீனா

பாகிஸ்தான், சீனா என இரு அண்டை தேசங்களை பரம எதிரிகளாக வரிந்து, தீவிரமாக அரசியல் களமாடுவதும் பாஜக அஜெண்டாவில் அடங்கும். முந்தைய ஆட்சிக் காலங்களில் இந்த 2 எதிரிகளையும் காங்கிரஸ் போஷித்து வளர்த்ததாகவும் பின்னர் ஏமாந்து நின்றதாகவும் பேசி வருகிறார்கள். ’மோடியின் ராஜதந்திர நடவடிக்கைகளால் இந்த 2 வைரிகளில் பாகிஸ்தான் தற்போது வீழ்ந்துவிட்டது; மோடியின் அடுத்த குறி சீனாதான்’ என்கிறது மேற்படி தேசபக்தர்களின் வாட்ஸ் அப் பகிர்வுகள்.

ஆனால், நிதர்சனம் வேறாக இருக்கிறது. எல்லை நெடுக தொல்லைகளைக் கடைவிரிக்கும் சீனா, அருணாச்சல பிரதேசத்தில் கிராமங்களை ஆக்கிரமித்து படைக்கலன்களை அணிவகுக்கச் செய்து, ஊர் பெயர்களை எல்லாம் அழித்து மாண்டரின் மொழியில் திருத்திக்கொண்டிருக்கிறது.

எல்லை மாநிலம் மட்டுமன்றி, இந்தியாவின் உள்ளாகவும் சகல துறைகளிலும் மறைமுகமாக வியாபித்தும் வருகிறது சீனா. சாமானியர் நன்கறிந்த மின்னணு சாதனங்கள், மொபைல் செயலிகள் மட்டுமன்றி, அரசின் பெரும் வணிகம் மற்றும் கட்டுமான ஒப்பந்தங்களிலும் சீன நிறுவனங்கள் நுழைந்திருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள்.

செயலிகளைப் பொறுத்தளவில் பாதுகாப்பின் பெயரில் டிக்டாக்கை தடை செய்தது மத்திய அரசு. ஆனால், கடன் செயலிகளின் பெயரால், இந்திய ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாகவே சாமானிய இந்தியர்களை மோசடியாக கடன்காரர்களாக்கி வஞ்சித்தது சீனா. அவற்றை அடையாளம் கண்டு கட்டுப்படுத்த முயலும் அரசு அதிகார அமைப்புகள், அதானி போன்ற பெரு நிறுவனங்கள் வாயிலாக மறைமுகமாக கால்பரப்பும் சீன நிறுவனங்கள் கண்டு திகைத்து நிற்கின்றன.

சாங் சங்-லிங்; பொங்கும் புகார்கள்

அமெரிக்காவின் ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையில், சாங் சங்-லிங் என்ற சீனர் குறித்து ஒரண்டை இழுத்திருக்கிறார்கள். அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களுடன் பல்லாயிரம் கோடிகளில் பணப்பரிமாற்றம் நடத்தியிருப்பதுடன், மொரிசிஷியஸ் நாட்டின் பிரபல ’ஷெல்’ நிறுவனங்கள் வாயிலாக இவற்றை சாத்தியமாக்கவும் செய்திருக்கின்றனர். கவுதம் அதானியின் அண்ணன் வினோத் அதானிக்கு மிகவும் நெருக்கமான சாங் சங்-லிங்கின் சிங்கப்பூர் முகவரி என்பது அங்குள்ள வினோத் அதானியின் முகவரியாக இருப்பதையும் ஹிண்டர்பர்க் அம்பலப்படுத்தியது.

சாங் சங்-லிங்கின் க்ரோமர் என்ற மொரிஷியஸ் நிறுவனம், அதானி குழுமத்தின் பல்வேறு சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளுக்கு உதவியிருக்கிறது. இதனை அதானி வாங்கிய பிறகும் சாங் சங்-லிங்தான் அதனை நிர்வகித்து வருகிறார். இது தவிர்த்து சாங் சங்-லிங்கின் ’பிஎம்சி புராஜெக்டஸ்’ நிறுவனத்துக்காக அதானி குழுமத்திடமிருந்து ரூ.6,300 கோடி சென்றிருப்பதை ஹிண்டர்பர்க் அம்பலப்படுத்தியிருக்கிறது.

அதானியுடன் சாங் சங்-லிங் (சிவப்பு கட்டத்தில் இருப்பவர்)
அதானியுடன் சாங் சங்-லிங் (சிவப்பு கட்டத்தில் இருப்பவர்)

இந்த ’பிஎம்சி’யை ’பிரதம மந்திரி சீன’ திட்டங்கள் என்று ராகுல் கிண்டலடித்து வருகிறார். சாங் சங்-லிங்கின் மகன் நடந்தும் இந்த நிறுவனம் மூலமாக வட கொரியாவுக்கு, ஐநா தடையை மீறி பெட்ரோலியம் அனுப்பப்பட்டதும் வெளிப்பட்டிருக்கிறது. சர்வதேச சர்ச்சைக்குரிய வேறு என்ன நடவடிக்கைகளில் சா சங்-லிங் குடும்பத்தினர் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று மேற்கு ஊடகங்கள் மேலும் துருவி வருகின்றன.

ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையில் சாங் சங் லிங் குறித்து பல இடங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டது. ஹிண்டர்பர்க் அறிக்கையை ’தேசத்தின் மீதான தாக்குதல்’ என்று, தேசியக்கொடி பின்னணியில் நின்று சாடிய அதானி நிறுவனத்தார், சாங் சங்-லிங் குறித்து மட்டும் வாய் திறக்கவே இல்லை. தொடர்ந்து அதானி தரப்பில் வெளியிட்ட பல நூறு பக்கங்களிலான பதில் அறிக்கையிலும், சாங் சங்-லிங் குறித்த கேள்விகளுக்கு பதில் இல்லை. தேசத்தின் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் சீனர்கள் மற்றும் சீன நிறுவனங்களின் பங்கு என்ன என்ற காங்கிரஸ் கேள்விக்கு மோடி சர்க்காரிடமிருந்தும் பதில்லை. மோடி இன்னமும் அதானி குறித்தே வாய் திறக்காதபோது, அதானியின் சீன உறவு குறித்து எப்படிப் பேசுவார்?

அதானி - மோடி
அதானி - மோடி

பல்லிளிக்கும் சலுகைசார் முதலாளியம்

2014-ல் மோடி முதல் முறையாக பிரதமர் நாற்காலியில் அமர்ந்தபோது, உலகப்பணக்காரர் வரிசையில் நானூற்றுச் சொச்ச இடத்தில் இருந்த அதானி மளமளவென முன்னேறி 2-வது இடத்தைப் பிடித்தார். மோடி வாய் திறக்காவிட்டாலும், அதானி குழுமத்தின் வளர்ச்சியில் மோடியின் பங்கை எவராலும் மறுக்க முடியாது. குஜராத் முதல்வராக மோடி இருந்த காலம் தொட்டு, தொட்டுத் தொடரும் இந்த வணிக உறவு இதர கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது. ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கைக்கான பதிலாக, ’இந்தியாதான் அதானி; அதானிதான் இந்தியா’ என வட இந்தியர்களை முழங்கவும் வைத்திருக்கிறது.

முதலாளித்துவத்துவத்தின் பன்முகங்களில் ’க்ரோனி கேபிடலிசம்’ எனப்படும் சலுகைசார் முதலாளியமும் ஒன்று. ஆட்சி எதுவானாலும் ஆட்சியாளர்களின் பெருநிறுவன சார் நிலைகள் தொடரவே செய்கின்றன. டாடா முதல் அதானி வரை இதற்கான உதாரணங்கள் உண்டு. காலனியாதிக்க காலம் தொட்டே இந்திய தொழில் துறையில் கால்பரப்பி வரும் முன்னோடி நிறுவனமான டாடாவுக்கு ஏராளமான சலுகைகள் அளிக்கப்பட்டன. டாடாவுடனான பிணக்கில் இந்திரா காந்தி பிர்லா நிறுவனத்தின் வளர்ச்சியை ஊக்குவித்தார். ராஜிவ் காந்தி காலத்தில் அம்பானிகள் பிழைத்தனர். இப்போது மோடி ஆசியில் அதானி பிழைத்திருக்கிறது. ஆனால், டாடா நிறுவனம் 90 ஆண்டுகளில் காணாத வளர்ச்சியை அதானி 9 ஆண்டுகளில் சாதித்திருப்பதன் பின்னணியில், அதானி அடைந்திருப்பது வளர்ச்சியா அல்லது அபாயகர வீக்கமா என்ற கேள்வி அர்த்தம் பெறுகிறது.

மோடி - அதானி
மோடி - அதானி

மோடி பின்னே அதானி; அதானி பின்னே சீனா?

ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையின் சூடு ஆறிய பிறகு அதானி பங்குகள் மீண்டும் இந்திய சந்தைகளில் தேறி வருகின்றன. அதானி நிறுவனங்கள் தனது கடன்கள் பலவற்றை முன்கூட்டியே அடைத்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற முயன்று வருகிறது. இஸ்ரேலில் புதிய முதலீடுகளை தொடங்கியிருக்கிறது. அதானி விரைவில் மீண்டெழக் கூடும். இப்படி ஆட்சியாளர்களின் ஆசி பெற்ற ஒரு நிறுவனம் வேகமாக வளர்வதும், வீழ்வதும், தேங்குவதும், விமர்சனத்துக்கு ஆளாவதும் உள்நாட்டு விவகாரங்களாக அடையாளம் காணலாம்.

ஆனால், அந்த பிரம்மாண்ட நிறுவனத்தின் நிழலில் சந்தேகத்துக்கு இடமான வகையில், பகை தேசத்து பங்காளிகளும் அவர்களின் நிழல் நிறுவனங்களும் இடம் பிடித்திருப்பது, அத்தனை எளிதில் ஒதுக்கக்கூடியதல்ல. தேசப் பாதுகாப்புக்கான தளவாடங்களை தயாரிக்கப் போகும் அதானி நிறுவனத்துடனான உறவில் சீனர்கள் திளைத்திருப்பதையும் எதிர்க்கட்சிகள் இத்தனை அச்சத்தோடே பார்க்கின்றன. கேள்விகள் கேட்கின்றன. சகலத்துக்கும் தேசப் பாதுகாப்பை முன்னிறுத்தும் தேச பக்தர்களையும் இந்தப் போக்கு துணுக்குறச் செய்திருக்கிறது.

அதானிக்கு எதிராக மற்றுமொரு ஹிண்டர்பர்க் அறிக்கை வரலாம். ராகுல் காந்தி போன்றோர் தொடர்ந்து குரல் கொடுக்க நேரிடலாம். ஆனால் அவற்றின் மத்தியில், அதானியை மோடி காப்பது போன்று, சீன பின்னணியை அதானி காப்பதையும் அத்தனை எளிதாக கடந்துவிட முடியாது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in