
இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 71 பேர் உயிரிழந்துள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சிம்லாவின் சம்மா் ஹில், கிருஷ்ணா நகா், ஃபாக்லி உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
சம்மா் ஹில் பகுதியில் கடந்த திங்கள்கிழமை நிலச்சரிவால் ஒரு சிவன் கோயில் மண்ணில் புதைந்தது. மழை மற்றும் நிலச்சரிவால் மாநிலத்தில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 71ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து மாநில அரசின் வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் ஓன்கர் சந்த் சர்மா கூறுகையில், "கடந்த மூன்று நாட்களில் நிலச்சரிவு உள்பட மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 71ஆக அதிகரித்துள்ளது. இதில் 57 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 13 பேரை இன்னும் காணவில்லை. காணாமல் போனவர்களை தேடும் பணியும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடக்கின்றன’’ என்று தெரிவித்துள்ளார்.