பாஜகவின் ‘டபுள் இன்ஜின்’ பிரச்சாரம் இமாச்சலில் எடுபடுமா?

பாஜகவின் ‘டபுள் இன்ஜின்’ பிரச்சாரம் இமாச்சலில் எடுபடுமா?

பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி என மும்முனை போட்டியுடன் 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சல் பிரதேச சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(நவ.12) நடைபெற்று வருகிறது.

குஜராத்தில் செல்லுபடியான ‘டபுள் இன்ஜின்’ வெற்றி வாசகத்தை இமாச்சலிலும் முன்வைத்து நம்பிக்கையுடன் முழங்கியது பாஜக. மத்தியில் ஆட்சியிலுள்ள கட்சியை மாநிலத்திலும் தேர்வு செய்யும்போது, அநேக திட்டங்களையும், பலன்களையும் பெறலாம் என்பதை முன்வைத்தே, பல்வேறு மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல்களை பாஜக எதிர்கொண்டு வருகிறது. இத்துடன் மாநில மற்றும் மத்திய ஆட்சிகளின் சாதனைகளையும், பிரதமர் மோடியின் தீரங்களையும் சொல்லி வாக்கு சேகரித்தது. மோடி, அமித் ஷா என கட்சியின் ஆகப்பெரும் தலைவர்கள் பிரச்சார கூட்டங்களில் பங்கெடுத்தார்கள்.

காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி தவிர்த்து நட்சத்திர தலைவர்கள் இல்லாதது அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மாநிலத்திலும் பெருந்தலைகள் அதிகம் என்பதால் அவர்கள் மத்தியிலான மோதலும் கால்வாரலுமாக பிரச்சார முனைப்பு பின்தங்கிப் போனது. அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆஆக பிரச்சாரம் உத்வேகத்துடன் தொடங்கியது. ஆனால் குஜராத் தேர்தல் அறிவிப்பை அடுத்து முக்கிய தலைவர்கள் அங்கே தாவியதில் உள்ளூர் தலைவர்கள் மட்டுமே இமாச்சல் பிரச்சாரத்தை ஒப்பேற்றினார்கள்.

ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை பிரிப்பதில் காங்கிரஸ் மற்றும் ஆஆக மும்முரம் காட்டுகின்றன. அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது, வேலையில்லா திட்டத்தை ஒழிப்பது, விலைவாசியை குறைப்பது, விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் என மேலான வாக்குறுதிகளையே எதிர்க்கட்சிகள் தந்துள்ளன.

மொத்தமுள்ள 68 தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் களமிறங்கி உள்ளன. ஆஆக 67, பகுஜன் சமாஜ் 53, ராஷ்ட்ரீய தேவ்பூமி 29, சிபிஎம் 11 என்று இதர கட்சிகளும் அவற்றுக்கான நம்பிக்கை தொகுதிகளில் களமிறங்கி உள்ளன. பெரும்பான்மை வாய்க்காவிட்டால் குதிரை பேரம் கொடிகட்டிப் பறக்கும் என்பதால் ஏராளமான சுயேட்சைகளும் நப்பாசையுடன் கோதாவில் குதித்திருக்கின்றனர். இந்த வகையில் மொத்தம் 412 வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள். மாநிலத்தின் சுமார் 55 லட்சம் வாக்காளர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கான தங்கள் தலையெழுத்தை இன்று தீர்மானிக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in