ஹிஜாவு நிறுவன 500 கோடி மோசடி வழக்கு: ஜாமீனில் வந்த ஏஜென்ட் தற்கொலையால் பரபரப்பு

ஹிஜாவு  நிறுவன ஏஜென்ட் தற்கொலை
ஹிஜாவு நிறுவன ஏஜென்ட் தற்கொலைஹிஜாவு நிறுவன 500 கோடி மோசடி வழக்கு: ஜாமீனில் வந்த ஏஜென்ட் தற்கொலையால் பரபரப்பு

ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த ஏஜென்ட் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த ஹிஜாவு நிறுவனம் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோரிடம் இருந்து 1லட்சம் ரூபாய் கொடுத்தால் மாதம் 15 சதவீத வட்டி தருவதாக கூறி சுமார் 500 கோடி ரூபாய்க்கும் மேலாக மோசடியில் ஈடுபட்டது. இந்த மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் ஹிஜாவு நிறுவனத்தின் உரிமையாளர் சௌந்தரராஜன், நிர்வாக இயக்குனர் அலெக்சாண்டர் உட்பட 21 நிர்வாகிகள் மீது மோசடி வழக்குபதிவு செய்தது.

அத்துடன் இந்நிறுவனத்தில் ஏஜென்டாக பணியாற்றிய நேரு, மணிகண்டன், முகமது ஷெரிப், சாந்தி பாலமுருகன், சுஜாதா, கல்யாணி ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் ஹிஜாவு நிறுவனத்தின் உரிமையாளர் சௌந்தர்ராஜன் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த நேரு(47) கடந்த 14-ம் தேதி ஜாமீனில் சிறையில் இருந்து வெளிவந்துள்ளார். கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்த நேரு பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி விட்டு நேற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில் இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்தினர் அளித்த தகவலின் பேரில், தண்டையார்பேட்டை போலீஸார் நேருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர். மோசடியில் சிக்கி பணத்தை இழந்த பொதுமக்கள் பணத்தை கேட்டு தொல்லை கொடுத்ததால் மனஉளைச்சலில் நேரு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணத்தில் தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in