`குட்டைப்பாவாடை, கோட்டும் தான் சீருடை; ஹிஜாப் அணியக்கூடாது'- கேரள பள்ளிக்கு எதிராக கொந்தளிக்கும் பெற்றோர்

ஹிஜாப்
ஹிஜாப்

கேரளத்தில் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்துவர தடைவிதிக்கப்பட்டுள்ளதால் இஸ்லாமிய மாணவியின் பெற்றோர் கல்வி அமைச்சரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

கேரள மாநிலம், கோழிக்கோட்டில், அப்போஸ்தலிக் கார்மல் தென் மாகாணச் சபையின் கீழ் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 11-ம் வகுப்புக்கு இஸ்லாமிய மாணவி ஒருவர் சேர்க்கப்பட்டார். இந்தப் பள்ளியில் குட்டைப்பாவாடையும், கோட்டும் சீருடையாக உள்ளது. கோட்டின் மேல் துப்பட்டா அணிவதற்கும் தடை உள்ளது. அதேபோல் இந்த அரசு உதவி பெறும் பள்ளியில் முஸ்லிம்கள் ஹிஜாப் அணிந்துவரவும் தடை உள்ளது.

இந்நிலையில் தான் நடப்பாண்டில் பள்ளியில் 11-ம் வகுப்பில் சேர்ந்த ஒரு மாணவியின் பெற்றோர் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என போராட்டத்திலும் குதித்தனர். இதுதொடர்பாக மாணவியின் தந்தை ரசாக், கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டிக்கும் புகார் அனுப்பியுள்ளார். அதில், “கேரளம் மதசார்பின்மையை மூச்சாகக் கொண்டு பயணிக்கும் மாநிலம். அரசின் சலுகைகளை பயன்படுத்திக்கொள்ளும் அரசு உதவிபெறும் பள்ளியானது, மத சுதந்திரத்தை மறுப்பது வினோதமானது. அமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர அனுமதிக்க வேண்டும்” என்றார்.

இதனிடையே பள்ளியின் முதல்வர் சில்வி, “பள்ளியின் விதிமுறைகளை தெளிவாக மாணவியிடமும், பெற்றோரிடமும் எடுத்துச்சொல்லித்தான் சேர்த்தோம். இது திடீர் என ஒருநாளில் நிகழ்ந்த மாற்றம் அல்ல. ஒருவேளை இந்தப் பள்ளியின் விதிமுறைகள் மாணவிக்கும், பெற்றோருக்கும் பிடிக்காவிட்டால் வேறு பள்ளிக்கு மாறிக் கொள்ளலாம்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in