பொதுமாறுதல் கலந்தாய்வை முதலில் நடத்துங்கள்: அமைச்சருக்கு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேண்டுகோள்

பொதுமாறுதல் கலந்தாய்வை முதலில் நடத்துங்கள்: அமைச்சருக்கு  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேண்டுகோள்

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு முதலில் நடத்திவிட்டு, அதன் பிறகே பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறைக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

"பள்ளிக்கல்வித்துறையில் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு ஜூலை 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது" என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் இன்று அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.

இதற்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழகத்தின் மாநில தலைவர் மா ரவிச்சந்திரன் இன்று கூறுகையில், "புதிய அரசு பொறுப்பேற்றதும் கடந்த ஆண்டு மிகச் சிறப்பான முறையில், எந்தவித லஞ்சங்களுக்கும் இடம் அளிக்காமல், நேர்மையான முறையில் கல்வித் துறையானது பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தியது. ஆனால் இந்த கல்வியாண்டின் துவக்கத்தில் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு கலந்தாய்வு மட்டுமே நடைபெறும் என்ற அறிவித்திருப்பது எமது பணித் தொகுதி தலைமையாசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் மனஉளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடந்த காலங்களில் மாறுதல் கலந்தாய்வுகளுக்கான அட்டவணையை கல்வித்துறை வெளியிடும்போது முதலில் பொது மாறுதல் கலந்தாய்வையும், அதன்பின்பு பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெறுமாறு கலந்தாய்வு அட்டவணையை வெளியிடுவார்கள். அது எவருக்கும் பாதிப்பு இல்லாமல் இருக்கும். கடந்த (2021-2022) கல்வியாண்டிலும் கூட இதே முறைதான் பின்பற்றப்பட்டது.

ஆனால் இந்த கல்வியாண்டில் நடைமுறைக்கு அப்பாற்பட்டு பொது மாறுதல் கலந்தாய்வை புறந்தள்ளி, பதவி உயர்வு கலந்தாய்வை முன்னிறுத்துவது ஏற்புடையது அல்ல. மேலும் இஎம்ஐஎஸ் வழியாக கலந்தாய்வு நடைபெறும் போது அரசுக்கு எந்த பொருட்செலவோ, இழப்பீடோ இல்லை.

எமது பணித் தொகுதி தலைமையாசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் நீண்ட நெடிய தூரத்தில் பணி செய்து வருகிறார்கள், அவர்களின் மனநிலை மற்றும் குடும்ப சூழ்நிலை ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு முதலில் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்திவிட்டு, அதன்பின்பு பதவி உயர்வு கலந்தாய்வை நடத்திட வேண்டும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் மற்றும் ஆணையர் ஆகியோரை கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.

ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்றுவது ஆசிரியர்கள் மத்தியில் எந்தவித மன வருத்தத்திற்கும், குழப்பத்திற்கும் இடமளிக்காமல் இருக்கும் என்பதால் பள்ளிக் கல்வித் துறை தலைமை ஆசிரியர்களின் இந்த வேண்டுகோளை பரிசீலிக்க வேண்டும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in