போத்தீஸ், சரவணா ஸ்டோர்ஸில் அனுமதி பெறாமல் மின்பயன்பாடு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

அனுமதி பெறாத தளங்களிலும் மின்சாரத்தை பயன்படுத்தி வரும் போத்தீஸ், சரவணா ஸ்டோர்ஸ், என்.ஏ.சி. நிறுவனங்களுக்கு எதிராக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எடுக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை தி.நகரில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடை, சரவணா ஸ்டோர்ஸ், என்.ஏ.சி. ஜுவல்லரி உள்ளிட்ட நிறுவனங்கள் மின் பயன்பாட்டிற்கு அனுமதி பெற்ற கட்டிட தளங்களையும் மீறி, அனுமதி பெறாத தளங்களிலும் மின்சாரத்தை பயன்படுத்தி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நோட்டீசுகளை எதிர்த்து அந்த நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. அந்த வழக்குகளில், அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்திற்குள் தான் மின்சாரத்தை பயன்படுத்தி வருவதால், நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தன.

இந்த வழக்குகளின் விசாரணை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணை வந்தது . அப்போது மின் பகிர்மான கழகம் சார்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் அஜராகி, மின் இணைப்பு பெறும்போது வழங்கப்பட்ட மின் இணைப்பு வரைபட திட்டத்தையும் மீறி, அங்கீகரிக்கபடாத தளங்களிலும் மின் இணைப்பை பயன்படுத்திவருகின்றனர் என்றும், அதனடிப்படையில் எடுக்கப்படும் மேல் நடவடிக்கைக்கு தடை விதிக்க கூடாது என்றும் வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி சதீஷ்குமார் மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in