`பிடியாணை பிறப்பித்து கந்துவட்டிகாரர்களை கைது செய்யுங்கள்'- 4 பேர் தீக்குளித்து உயிரிழந்த வழக்கில் நீதிபதி அதிரடி

`பிடியாணை பிறப்பித்து கந்துவட்டிகாரர்களை கைது செய்யுங்கள்'- 4 பேர் தீக்குளித்து உயிரிழந்த வழக்கில் நீதிபதி அதிரடி

கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து இறந்த வழக்கின் விசாரணையை 2 வாரத்தில் அமர்வு நீதிமன்றத்துக்கு அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்காசி அச்சன்புதூரைச் சேர்ந்த கோபி என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "கந்துவட்டி கொடுமை காரணமாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் 23.10.2017-ல் இசக்கிமுத்து, இவரது மனைவி சுப்புலெட்சுமி, மகள்கள் மதுஅரண்யா, அட்சயபரணி ஆகியோர் தீக்குளித்து இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக முத்துலட்சுமி, அவர் கணவர் தளவாய்ராஜ் மற்றும் காளி, கார்த்திக் ஆகியோர் மீது பாளையங்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கு நெல்லை முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

குற்ற வழக்குகளில் 10 ஆண்டுக்கு மேல் தண்டனை வழங்கக்கூடிய வழக்குகளை அமர்வு நீதிமன்றம் தான் விசாரிக்கும். இதற்காக வழக்கின் அனைத்து ஆவணங்களையும் நீதித்துறை நடுவர் அமர்வு நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். சம்பவம் நடைபெற்று 5 ஆண்டுகளாகியும் வழக்கு அமர்வு நீதிமன்றத்துக்கு அனுப்பப்படாமல் நீதித்துறை நடுவர் மன்றத்திலேயே உள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் உள்ளனர். விரைவில் விசாரணையை முடிக்க ஒத்துழைப்பு வழங்காமல் உள்ளனர். கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த வழக்கின் விசாரணையை முடித்து மேல் விசாரணைக்காக வழக்கை அமர்வு நீதிமன்றத்துக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் ஹென்றிடிபேன், ஆர்.கருணாநிதி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதன் பின்னர் நீதிபதி, கந்துவட்டி கொடுமையால் 4 பேர் உயிரிழந்த வழக்கில் விசாரணையை நெல்லை மாவட்ட அமர்வு நீதிமன்றம் விரைவில் தொடங்கும் வகையில் வழக்கின் ஆவணங்களை 2 வாரத்தில் அமர்வு நீதிமன்றத்துக்கு நீதித்துறை நடுவர் அனுப்ப வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர்கள் சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்தால் அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கலாம்" என உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in