திருச்செந்தூர் கோயில் திரிசுதந்திரர்களுக்கு கட்டுப்பாடு விதித்த அரசாணை ரத்து: புதிய வழிகாட்டுதலை பிறப்பிக்கவும்!

அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
திருச்செந்தூர் கோயில் திரிசுதந்திரர்களுக்கு கட்டுப்பாடு விதித்த அரசாணை ரத்து: புதிய வழிகாட்டுதலை பிறப்பிக்கவும்!

திருச்செந்தூர் கோயிலில் திரிசுதந்திரர்களுக்கு அடையாள அட்டை உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்றம், விதிமுறைகளை பின்பற்றி புதிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க அறநிலையத்துறைக்கு உரிமை வழங்கியுள்ளது.

திருச்செந்தூர் கோயில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது உட்பட பல்வேறு உத்தரவுகளை உயர் நீதிமன்றம் பிறப்பித்தது. இதையடுத்து அறநிலையத்துறை மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து திரிசுதந்திரர் ஒருவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி, திருச்செந்தூர் கோயிலில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் தடுக்க கோயில் பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை காவலர்களை நியமிப்பது உட்பட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். இந்த உத்தரவுகளை நிறைவேற்றி அறநிலையத்துறை ஆணையர் அரசாணை வெளியிட்டார்.

அந்த அரசாணையில், திரிசுதந்திரர்களுக்கு ஓராண்டுக்கு அடையாள அட்டை வழங்குவது உட்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இதை ரத்து செய்யக்கோரியும், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரியும் திரிசுதந்திரர்கள் சங்கம் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது.

மேலும் நீதிபதிகள், திருச்செந்தூர் கோயில் வழக்கில் உயர் நீதிமன்றம் 3 உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுகளின் அடிப்படையில் 1.4.2022-ல் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் சட்டப்படியாக இல்லை. திரிசுதந்திரர்கள், ஐயர்கள், பூஜாரிகள் என சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்து கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்செந்தூர் கோயில் வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படுகிறது என உத்தரவிட்டனர்.

இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஜி.ஆர்.சுவாமிநாதன், நிர்மல்குமார் ஆகியோர் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வு பிறப்பித்த உத்தரவில், திருச்செந்தூர் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் அமைதியாக எவ்வித இடையூறு இல்லாமல் சாமி தரிசனம் செய்ய வேண்டும். கோயிலில் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழக்கூடாது. இதற்காக கோயில் நிர்வாகத்தை முறைப்படுத்த வேண்டும். இந்த நோக்கத்தில் அறநிலையத்துறை சார்பில் பல்வேறு வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த வழிகாட்டுதல்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பாமல் பிறக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். அதை செய்யாமல் அவசரம் அவசரமாக வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதனால் வழிகாட்டுதல்கள் தொடர்பான அரசாணை ரத்து செய்யப்படுகிறது.

இருப்பினும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலனுக்காக சுதந்திரமாக முடிவெடுக்க கோயில் நிர்வாகத்துக்கு உரிமை வழங்கப்படுகிறது. இதனால் அறநிலையத்துறை சட்டப்படியான விதிமுறைகளை பின்பற்றி கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலனுக்காக புதிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in