தென்காசி கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணியை ஏன் நிறுத்தக்கூடாது?: சுற்றுச்சூழல் அனுமதி பெறாததால் உயர் நீதிமன்றம் காட்டம்

தென்காசி கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணியை ஏன் நிறுத்தக்கூடாது?: சுற்றுச்சூழல் அனுமதி பெறாததால் உயர் நீதிமன்றம் காட்டம்
ASHOK R

மாநில சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறாமல் ஆட்சியர் அலுவலகம் கட்டப்படுவது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த எஸ்.பி.முத்துராமன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்படுகிறது. ரூ.119 கோடி செலவில் 6 மாடிகளுடன் ஆட்சியர் அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த கட்டுமானப்பணிக்கு மாநில அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறவில்லை. இப்படி அரசு கட்டிடங்களைக் கட்டுவது விதிமீறலாகும். இதனால் சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணி மேற்கொள்ளும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், " சுற்றுச்சூழல் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அரசு அலுவலகம் கட்டுவதாக இருந்தாலும், சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெற வேண்டும். சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டுவது விதிமீறல். எனவே, சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் கட்டப்படுவதால் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணியை ஏன் நிறுத்தக்கூடாது? இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in