
நீதிமன்ற செய்தியாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக ’உயர்நீதிமன்ற பத்திரிகையாளர் சங்கம்’ சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி தொடங்கி வைக்கவுள்ளார்.
இதுத் தொடர்பாக அந்த சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’இந்திய ஜனநாயகத்தில் அனைத்து தரப்பினருக்கும் எல்லா பிரச்சினைக்களுக்கும் கடைசி புகலிடம் நீதிமன்றங்கள்தான். நீதிமன்றங்கள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை அளப்பறியது. நீதிமன்றங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி பிறப்பிக்கப்படும் உத்தரவுகளும், தீர்ப்புகளும் கடைக்கோடி சாமான்யனுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும்.
நீதிமன்ற அதிகார வரம்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். இந்த உன்னத பணியை மேற்கொண்டு நீதிமன்றங்களுக்கும் மக்களுக்கும் பாலமாக இருப்பதில் முக்கிய பங்கு வகிப்பது ஊடகங்கள், பத்திரிகைகள்தான். அந்த வகையில் நீதிமன்றங்களில் இந்த பணியை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தியாளர்கள் ஆற்றிவருகிறார்கள்.
அனைத்து பத்திரிகைகள், ஊடகங்களின் செய்தியாளர்கள் இருந்தாலும் அவர்களை ஒருங்கிணைக்க அவர்களுக்கென்று சங்கமோ, அமைப்போ இல்லாமல் இருந்தது. அதற்காகத்தான் நீதிமன்ற செய்தியாளர்களுக்கென்று ஒரு அமைப்பை நீண்ட ஆலோசனைக்குப்பின் உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில்தான் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக நீதிமன்ற செய்தியாளர்களுக்காக "சென்னை உயர்நீதிமன்ற பத்திரிகையாளர் சங்கம்" உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் மரபை, மாண்பை காப்பதில், உயர் நீதிமன்ற பத்திரிகையாளர்கள் சங்கம் உறுதுணையாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சமரசமில்லாமல் செயல்படவுள்ள 'எங்கள்' சங்கத்தின் தொடக்க விழா வருகிற 16-ம் தேதி மாலை 5 மணி அளவில் "தமிழ்நாடு பார் கவுன்சில்" கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா சங்கத்தை தொடக்கிவைத்து, மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் ’பி.எஸ்.எல் .பிரசாத் நினைவு’ சொற்பொழிவு ஆற்ற உள்ளார். நிகழ்ச்சியில் மூத்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன் ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.
அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கவுள்ளனர். இந்த விழாவில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்‘’ என குறிப்பிடப்பட்டுள்ளது.