ஒரு வழக்கில் விடுதலை; ஒரு வழக்கில் கணவருக்கு தண்டனை: மனைவி வழக்கில் உயர்நீதிமன்றம் முக்கிய விளக்கம்

ஒரு வழக்கில் விடுதலை; ஒரு வழக்கில் கணவருக்கு தண்டனை: மனைவி வழக்கில் உயர்நீதிமன்றம் முக்கிய விளக்கம்

வேறு வழக்குகளில் விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தை, தண்டனை விதிக்கப்பட்ட மற்றொரு வழக்கில் சிறையில் இருந்த காலமாக கருதி,  தண்டனை காலத்தை கணக்கில் கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

வழக்கு ஒன்றில் கடலூர் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சிவராமன் என்பவர், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வேறு இரு வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவர், நான்கு மாதங்களுக்கு மேல் விசாரணை கைதியாக சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார். இரு வழக்குகளில் ஒரு வழக்கில் விடுதலையும் செய்யப்பட்டார்.

இந்நிலையில் சிவராமன் தண்டனைக் கைதியாக  சிறையில் அடைக்கப்பட்ட காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணைக் கைதியாக சிறையில் இருந்த காலத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளும்படி 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழக அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, சிறையில் இருந்த காலத்தை கணக்கில் எடுக்க வேண்டுமானால், தண்டிக்கப்பட்ட குறிப்பிட்ட வழக்கில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தால் மட்டுமே கணக்கில் எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி, 2018-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் அல்லாமல் வேறு வழக்கில் விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்ட காலத்தை கணக்கில் எடுக்க முடியாது என நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளதால் பல்வேறு வழக்குகளிலும் இருந்து வந்த இது குறித்த குழப்பங்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in