சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்(கோப்புப் படம்)

தேசிய பட்டியலின ஆணையம் உத்தரவிட எந்த அதிகாரமும் இல்லை: கோயில் நிலம் ஆக்கிரமிப்பு வழக்கில் இடைக்கால தடை

கோயிலுக்குச் சொந்தமான நில ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது என தேசிய பட்டியலின ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மாதேபள்ளி கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ``சக்கி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 3.75 ஏக்கர் நிலத்தை சீனிவாசன் என்பவர் ஆக்கிரமித்து உள்ளார். தனக்கு சொந்தமான நிலத்தை அறநிலையத்துறை சட்ட விரோதமாக கையகப்படுத்த முயற்சிப்பதாக கூறி தேசிய பட்டியலின ஆணையத்தில் சீனிவாசன் புகார் அளித்தார். 

ஆக்கிரமிப்பை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது, தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உண்மை விவரங்கள் தெரியாமல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது, சிவில் நீதிமன்ற உரிமையை ஆணையம் எடுத்துக்கொள்ள அதிகாரம் இல்லை என்பதால் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும், அதற்கு தடை விதிக்க வேண்டும்'' என கூறியிருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு, ஆக்கிரமிப்பை அகற்றக் கூடாது என உத்தரவு பிறப்பிக்க தேசிய பட்டியலின ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்த உத்தரவு எவ்வாறு பிறப்பிக்கப்பட்டது என கேள்வி எழுப்பினர்.

ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது என தேசிய பட்டியலின ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதிகள்,  ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in