
திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி ஈரோடு மாவட்டம், பெரியவடமலைபாளையத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதிக்க கோரியும், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை ஒட்டி, திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் நீதிபதிகள் வேலுமணி, ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ’சேவல் சண்டையின் போது சூதாட்டம் நடத்தப்பட மாட்டாது; சேவல்கள் துன்புறுத்தப்பட மாட்டாது என உறுதி அளித்தால், சேவல் சண்டைக்கு அனுமதி கோரிய மனுக்கள் பரிசீலிக்கப்படும்’ என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, ’சேவல்களை துன்புறுத்தக்கூடாது, போட்டி நடைபெறும் இடத்தில் ஒரு கால்நடை மருத்துவர் இருக்க வேண்டும், சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது, சேவலுக்கு மது கொடுக்கக் கூடாது, காலில் கத்தி கட்டக் கூடாது’ என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன், சேவல் சண்டை நடத்த அனுமதியளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் ’குறிப்பிட்ட சமூதகத்தை பெருமைப்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. நிபந்தனைகளை மீறினால் காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்’ எனவும் வலியுறுத்தியுள்ளனர்.