
நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளதாக உயர்நீதி மன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் ஆகியோரின் உருவப்படங்களை மட்டுமே வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
ஆலந்தூரில் புதிதாக கட்டப்பட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் உருவப்படங்களை அகற்றுமாறு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதிக்கு சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவுறுத்தியிருந்தது. சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறையின் இந்த உத்தரவை மீறினால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் தகுந்த புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் சிலைகள் மற்றும் உருவப்படங்கள் தவிர, வேறு எந்த தலைவரின் உருவப்படங்களையும் நீதிமன்ற வளாகத்திற்குள் வைக்கக்கூடாது என்று அண்மையில் அனைத்து நீதிபதிகள் அடங்கிய அமர்வும் தெரிவித்திருந்தது.
இதற்கு தமிழ்நாட்டில் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல ஊர்களிலும் நீதிமன்றங்களை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாகவும் வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அறிவித்திருந்தன.
இதற்கிடையே இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து அமைச்சர் ரகுபதி ஆலோசனை நடத்தினார். அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்பட கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டினை தலைமை நீதிபதியிடம் ரகுபதி கடிதமாக வழங்கினார்.
அதையடுத்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப் படவில்லை என்று அமைச்சரிடம் தெரிவித்தார். இதையடுத்து இந்த பிரச்சனை இன்று முழுமையாக முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.