ஐ.டி கம்பெனி பெயரில் ஹைடெக் மோசடி: குமரி வாலிபரை தட்டித் தூக்கிய மும்பை போலீஸார்!

ஐ.டி கம்பெனி பெயரில் ஹைடெக் மோசடி: குமரி வாலிபரை தட்டித் தூக்கிய மும்பை போலீஸார்!

ஐ.டி கம்பெனியில் வேலைக்கு ஆள் எடுப்பதாக நேர்காணல் நடத்தி, டெபாசிட் தொகை வசூலித்து கம்பி நீட்டிய குமரி வாலிபரை, மும்பை போலீஸார் குமரிமாவட்டத்தில் கைது செய்தனர்.

குமரிமாவட்டம், திட்டுவிளை குருசடி பகுதியைச் சேர்ந்தவர் பரிமளராஜ். இவரது மகன் பிரின்ஸ் சாரோன்(30). இவர் மலேசிய நாட்டைச் சேர்ந்த தன் நண்பர்களுடன் சேர்ந்து ஐ.டி கம்பெனி நடத்துவதாகவும், அந்த நிறுவனத்திற்கு ஆள்கள் தேவை எனவும் சமூகவலைதளங்களின் வழியே விளம்பரம் செய்துள்ளார். அதைப் பார்த்துவிட்டு விண்ணப்பித்தவர்களிடம் இணையவழியில் நேர்காணல் நடத்தியிருக்கிறார். அவர்களுக்கு இவரே பணி நியமன ஆணையை இணையவழியில் வழங்கியிருக்கிறார். கூடவே இந்த வேலைக்கு டெபாசிட் தொகை கட்டவேண்டும் என பெரிய அளவில் ஒரு தொகையையும் வாங்கிவிட்டு தான் பயன்படுத்திய சிம் கார்டு, ஐடி ஆகியவற்றை மாற்றிவிடுவார்.

மும்பை, மலேசியாவை மையமாகக் கொண்டு இந்த மோசடியை அரங்கேற்றிவிட்டு குமரியில் வந்து அமைதியாக பணத்தை பிரின்ஸ் சரோன் செலவழித்துள்ளார். இவரது நண்பர்களோடு சேர்ந்து பிரின்ஸ் இதைச் செய்தாலும், அவர்தான் இந்த மோசடிக்கு மூளையாகச் செயல்பட்டுள்ளார். மும்பையில் பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து மும்பை சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் கொடுத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் பிரின்ஸ் சாரோனின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு, மும்பை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ராகுல்கேத்ரி தலைமையிலான போலீஸார் குமரிக்கு வந்து பிரின்ஸ் சாரோனை அவரது வீட்டிலேயே கைது செய்தனர். அவர் இந்த மோசடிகளை அரங்கேற்ற பயன்படுத்திய 83 சிம்கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. லேப்டாப் உள்ளிட்ட வேறுசில ஆவணங்களையும் கைப்பற்றிய மும்பை போலீஸார் பிரின்ஸ் சாரோனை கைது செய்து, மும்பைக்கு அழைத்துச் சென்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in