‘பழங்குடிப் பெண்ணைக் குடியரசுத் தலைவராக்கிய பாஜக, பழங்குடியின முதல்வரை அகற்ற முயல்கிறது!’

ஜார்க்கண்டில் பெரும்பான்மையை நிரூபித்த ஹேமந்த் சோரன் ஆவேசம்
‘பழங்குடிப் பெண்ணைக் குடியரசுத் தலைவராக்கிய பாஜக, பழங்குடியின முதல்வரை அகற்ற முயல்கிறது!’

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலவிவந்த அரசியல் குழப்பங்களுக்கு நடுவே, இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றிருக்கிறது ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு. இதையடுத்து, ஆட்சியைக் கவிழ்க்க முயன்றதாக பாஜக மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார் ஹேமந்த் சோரன்.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் மொத்தம் 81 இடங்கள் உள்ளன. பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை. ஆளும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு (ஜேஎம்எம்) 30 எம்எல்ஏ-க்கள் இருக்கிறார்கள். அக்கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 18 உறுப்பினர்களும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு ஒரு உறுப்பினரும் இருக்கிறார்கள். பாஜகவுக்கு 26 எம்எல்ஏ-க்கள் உள்ளனர்.

இந்நிலையில், சுரங்க முறைகேடுகளில் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் ஈடுபட்டதாக பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறது. கூடவே, ஜேஎம்எம் கட்சியினரை வளைக்க பாஜக முயற்சித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, காங்கிரஸ் ஆட்சி நடந்துவரும் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு ஆளுங்கட்சி எம்எல்ஏ-க்களை அனுப்பிவைத்தார் ஹேமந்த் சோரன். அங்கு ஒரு ரிசார்ட்டில் அவர்கள் தங்கவைக்கப்பட்டனர்.

பிரச்சினை உச்சமடைந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று ஒருநாள் சிறப்புக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் அரசு பெரும்பான்மையை நிரூபித்துவிட்டது. நேற்று சிறப்பு விமானம் மூலம் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்குத் திரும்பிய ஆளுங்கட்சி எம்எல்ஏ-க்கள் ஒரு விருந்தினர் மாளிகையில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். காலையில் அங்கிருந்து நேராக சட்டப்பேரவைக்கு அவர்கள் அழைத்துவரப்பட்டனர்.

“ஜார்க்கண்ட் எதிர்க்கட்சியான பாஜக ஜனநாயகத்தைச் சிதைத்துவிட்டது. குதிரை பேர அரசியலில் ஈடுபடுகிறது. சட்டப்பேரவையில் எங்கள் பலத்தை நிரூபிப்போம்” என்று ஹேமந்த் சோரன் கூறினார்.

பாஜக வெளிநடப்பு

சிறப்புக் கூட்டத்துக்கு ஆரம்பம் முதலே கடுமையாக எதிர்த்துவந்த பாஜக, வாக்கெடுப்புக்கு முன்னதாகப் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தது. அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (ஏஜேஎஸ்யூ) கட்சியும் வெளிநடப்பு செய்தது.

வாக்கெடுப்பில் 48 வாக்குகளுடன் வெற்றிபெற்ற ஹேமந்த் சோரன் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது, ‘எதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது?’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது,“பின்னே நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்க்கட்சியா நடத்தும்?” எனக் கேட்டார்.

பாஜக மீது சரமாரியான விமர்சனங்களையும் அவர் முன்வைத்தார்.

“தேர்தலில் ஜெயிப்பதற்காகக் கலவரத்தைத் தூண்டிவிட்டு உள்நாட்டுப் போரைப் போன்ற சூழலை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஜார்க்கண்ட் எம்எல்ஏ-க்களை வாங்க முயற்சித்தார். மக்கள் ஆடைகள் வாங்குவார்கள், ரேஷன் பொருட்கள் -மளிகைப் பொருட்களை வாங்குவார்கள். ஆனால், பாஜக மட்டும்தான் எம்எல்ஏ-க்களை வாங்குகிறது” என்று கூறிய அவர், “நாட்டின் முதல் பழங்குடியினக் குடியரசுத் தலைவரைப் பதவியில் அமர்த்திய பாஜக, ஒரு பழங்குடியின முதல்வரைப் பதவியிலிருந்து அகற்ற முயற்சிக்கிறது” என்றும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பியதன் மூலம் கர்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் பாஜக வெற்றிகரமாகச் செய்துகாட்டிய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை ஜார்க்கண்டில் முறியடித்துவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

பதவி தப்புமா?

இதற்கிடையே, சுரங்கத் துறையைத் தன்வசம் வைத்திருக்கும் ஹேமந்த் சோரன் தனக்காக சுரங்கம் ஒன்றைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டதன் மூலம் தேர்தல் விதிமுறைகளை மீறிவிட்டதாகக் குற்றம்சாட்டியிருக்கும் பாஜக, அதன் அடிப்படையில் அவர் எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திவருகிறது.

தார்மிக அடிப்படையில் அவர் பதவிவிலக வேண்டும் என்றும், புதிதாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் பாஜக கோரிவருகிறது.

இதுதொடர்பாகத் தனது கருத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்திருக்கிறது தேர்தல் ஆணையம். இதுகுறித்து ஆளுநர் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in