
வெளிநாட்டுக்கு வேலைக்கு போன இடத்தில் உயிரிழந்த கணவரின் உடலைச் சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர் மனு அளித்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருமாஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம்(45). இவருக்கு தெய்வானை என்ற மனைவியும், 2 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செல்வம் சவுதி அரேபியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 12-ம் தேதி செல்வம் இறந்து விட்டதாக சவுதி அரேபியாவில் உள்ள அவரது நண்பர்கள் மூலம் தெய்வானை குடும்பத்திற்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து செல்வத்தின் உடலைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால், மனு அளித்து 20 நாட்களாகியும் செல்வத்தின் உடலைக் கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
இதையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் இன்று முறையிட்ட தெய்வானை, குடும்ப வாழ்வாதாரத்திற்காக வெளிநாட்டு வேலைக்குச் சென்று மர்மமான முறையில் உயிரிழந்த கணவரின் உடலைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, வருவாய்க்கு வழியில்லாத நிலையில் உள்ள எங்கள் குடும்பத்திற்கு, கணவர் செல்வம் வேலை பார்த்த கம்பெனியில் தர வேண்டிய சம்பள நிலுவைத் தொகையினையும், இழப்பீட்டையும் பெற்றுத்தரக்கோரி கண்ணீருடன் மனு அளித்தார்.