பில்லியனில் அமர்ந்து பயணிப்பவர்களுக்கு ஹெல்மெட்: இனி மும்பையிலும் கட்டாயம்!

பில்லியனில் அமர்ந்து பயணிப்பவர்களுக்கு ஹெல்மெட்: இனி மும்பையிலும் கட்டாயம்!

தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள், வாகனத்தின் பில்லியனில் (சீட்டின் பின்புறம்) அமர்ந்திருப்பவர்கள் சாலை விபத்துகளில் உயிரிழப்பது அதிகம். இதனால் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களைப் போலவே பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் தலைக்கவசம் அணிவது அவசியம் எனத் தொடர்ந்து கருத்துகள் முன்வைக்கப்பட்டுவந்தன. இதுதொடர்பான விதிமுறைகள் இருந்தும் பலரும் பின்பற்றுவதில்லை என்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.

இந்தச் சூழலில், சென்னையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களுக்கும் தலைக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதைக் கடுமையாக அமல்படுத்தவும், கண்காணிக்கவும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், மும்பையிலும் இது கட்டாயமாக நடைமுறைக்கு வருகிறது. இதுதொடர்பாக மும்பை மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இதைப் பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 15 நாட்களுக்குப் பிறகு இது நடைமுறைக்கு வருகிறது. அதேபோல் சாலைப் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மும்பையைப் பொறுத்தவரை பில்லியனில் அமர்ந்து பயணிப்பவர்கள் மட்டுமல்ல, இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்களே பெரும்பாலும் தலைக்கவசம் அணிவதில்லை. இதை மும்பை போக்குவரத்துக் காவல் துறையே சுட்டிக்காட்டியிருக்கிறது.

தற்சமயம், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் செலுத்துபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது அல்லது அவர்களது ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக முடக்கிவைக்கப்படுகிறது. 15 நாட்களுக்குப் பிறகு பில்லியனில் அமர்ந்து பயணிப்பவர்களுக்கும் இந்த அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in