தீபாவளியை முன்னிட்டு டோல்கேட் கட்டணம் ரத்து?- நெரிசலைத் தவிர்க்க நடவடிக்கை!

தீபாவளியை முன்னிட்டு டோல்கேட் கட்டணம் ரத்து?- நெரிசலைத் தவிர்க்க நடவடிக்கை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்வதற்குச் சென்னை மக்கள் படையெடுத்து வருகிறார்கள். இதனால் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு வரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

தீபாவளிப் பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் இருப்பவர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கு வசதியாகச் சிறப்பு ரயில்கள், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆம்னி பேருந்துகள், சிறப்புப் பேருந்துகள், கார்கள் என வாகனங்களில் நேற்று மாலை முதலே மக்கள் சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவு செல்லும் வாகனங்களின் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகத் தாம்பரம் அடுத்துள்ள பெருங்களத்தூரிலிருந்து பரனூர் சுங்கச்சாவடி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சில கி.மீ. தொலைவிற்கு வாகனங்கள் ஆமைபோல் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதைத் தவிர்க்கக் கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைகளை பயன்படுத்த வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் வாகனங்களுக்குச் சுங்கக் கட்டணம் வசூல் செய்ய வேண்டாம் என வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இன்று மாலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் வாகனங்களுக்குச் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாமல் அனுப்பி வைக்கப்படலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in