நாளை உருவாகப் போகும் புயல்: இன்றே தொடங்கியது கனமழை

நாளை உருவாகப் போகும் புயல்: இன்றே தொடங்கியது கனமழை

தென்மேற்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி  உருவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் அதன் விளைவாக  தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்றே கனமழை தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதனையடுத்து தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் முதலாக உருவான சிட்ராங் புயல் தமிழகத்தை தவிர்த்து விட்டு வங்கதேசம் நோக்கிச் சென்றாலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு பெரும் மழையை தந்துவிட்டே சென்றது.

இந்த நிலையில்  வங்கக்கடலில் அடுத்த புயல் உருவாக வாய்ப்பு  உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை (நவ.9) தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும்,  அது வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையமும், தனியார் வானிலை ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர்.

அதனை ஒட்டி நாளை முதல் நவ.11-ம் தேதி வரை தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், நவ.14- ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்த நிலையில்  இரண்டு நாட்கள் முன்னதாகவே  7-ம் தேதி நள்ளிரவில் இருந்தே பெரும்பாலான பகுதிகளில் கனமழை தொடங்கியுள்ளது.

சென்னையில் நேற்று நள்ளிரவு தொடங்கி  எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை,  தேனாம்பேட்டை, கிண்டி, வேளச்சேரி, கோடம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை விடிய விடிய கொட்டித்தீர்த்தது. கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா  மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால்  ஆகிய இடங்களிலும் இரவே மழை தொடங்கி விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே சில இடங்களில் வெயிலும் அடிக்கிறது. சில இடங்களில் இரண்டு நாட்களும்,  பல இடங்களில் ஒரு நாளும்  இடைவெளி விட்டிருந்த நிலையில் மீண்டும் மழை தொடங்கியுள்ளதால்  விவசாய பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in