கனமழை.. கோவையில் வெள்ள அபாய எச்சரிக்கை... ஆட்சியர் அறிவிப்பு!

கனமழை.. கோவையில் வெள்ள அபாய எச்சரிக்கை... ஆட்சியர் அறிவிப்பு!

கோவையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், பவானி ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், நீலகிரி, கோவையிலும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் வட்டம் பில்லூர் அணையின் மொத்த அளவான நீர்மட்டம் 100 அடியில் தற்போதைய நிலவரப்படி நீர்மட்டம் 94 அடிகளை எட்டி உள்ளது. இதன் காரணமாக பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 6000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள காரணத்தினால் பவானி ஆற்று கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் விடுத்துள்ளார். மேலும், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருந்திடவும், சிறுவர்கள் ஆற்று பக்கம் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் 35 செமீ மழையும், மேல்பவானியில் 10 செமீ மழையும், தேவாலாவில் 9 செமீ மழையும் பதிவாகியுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in