கனமழை எச்சரிக்கை: நாளை 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை எச்சரிக்கை: நாளை 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக நாளை சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வங்க கடலில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதிகளின் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக, புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். அடுத்த இரு தினங்களில் தமிழக- கேரள பகுதிகளை கடந்து செல்லும். இதன் காரணமாக நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 13-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியின் ஒரு சில இடங்களில் இடி மின்னலும் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், வேலூர், நீலகிரி, மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in