
கேரளத்தில் வரும் 4-ம் தேதிவரை பலத்தக் காற்றுடன், கனமழையும் பெய்யக் கூடும் என மத்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வானிலை ஆய்வுமையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் , “கேரளத்தில் வரும் 4-ம் தேதிவரை பல மாவட்டங்களில் கனமழையும், 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றும் வீசக்கூடும். இன்றும், நாளையும் பத்தனம்திட்டா மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 3-ம் தேதி பத்தனம் திட்டா, எர்ணாக்குளம், ஆழப்புழா, இடுக்கி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
வரும் 4-ம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, ஆழப்புழா, கோட்டயம், எர்ணாக்குளம், இடுக்கி மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடப்படுகிறது. இந்தப் பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நாள்களில் குறைந்தபட்சம் 65 மில்லி மீட்டர் மூதல் அதிகபட்சம் 115.5 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும்.
கேரளா-லட்சத்தீவு இடையேயான கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம். இந்தப் பகுதிகளில் 3, மற்றும் 4-ம் தேதிகளில் 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகம்வரைக் காற்று வீசக்கூடும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.