ஈரோடு ஜவுளி சந்தையை மிரட்டும் தொடர்மழை: வியாபாரிகள் கவலை

ஈரோடு ஜவுளி சந்தையை மிரட்டும் தொடர்மழை: வியாபாரிகள் கவலை

தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே தமிழகத்தின் பிரபலமான கனி மார்க்கெட் ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மதியம் வரை ஜவுளி சந்தை நடைபெறுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் இந்த சந்தைக்கு வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செல்வார்கள். விசேஷ காலங்களில் ஒருநாளைக்கு இந்த ஜவுளி சந்தையில் 4 கோடி ரூபாய் வரை வர்த்தம் நடைபெறும்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த சில வாரங்களாக, இந்த சந்தையில் வெளி மாநில வியாபாரிகளும், வெளிமாவட்ட வியாபாரிகளும் குவிந்ததால் மொத்த வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், கடந்த வாரம் கூடிய சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வாரம் ஜவுளி சந்தை கூடிய நிலையில், தொடர்மழை காரணமாக வெளி மாநிலத்திலிருந்து வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்தனர். கனமழை பெய்து வருவதால் கேரளாவில் இருந்து வியாபாரிகள் நேற்று வரவில்லை. ஆந்திராவிலிருந்து மட்டும் சில வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

இதனால் 10 சதவீத அளவிற்கே நேற்று மொத்த வியாபாரம் நடைபெற்றுள்ளது. ஆனால், வெளி மாவட்டங்களில் இருந்து உள்ளூர் வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்ததால் ஜவுளி சந்தையில் சில்லறை வியாபாரம் ஓரளவு நடைபெற்றது.இதனால் 30 சதவீதம் சில்லறை வியாபாரம் நேற்று நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்துவதற்கான விதவிதமாக ஸ்வெட்டர்கள் அதிகளவில் ஜவுளி சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in