
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதல் இரவு வரை மழை வெளுத்து வாங்கிய நிலையில், இன்று தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளையொட்டி தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழக மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
இலங்கை கடலோராப் பகுதிகள், தெற்கு வங்க கடல் பகுதிகள், மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.