கொட்டி தீர்க்கும் கனமழை... சாலையில் விழுந்த ராட்சத மரங்கள்: ஸ்தம்பித்த நீலகிரி மாவட்டம்

கொட்டி தீர்க்கும் கனமழை... சாலையில் விழுந்த ராட்சத மரங்கள்: ஸ்தம்பித்த நீலகிரி மாவட்டம்

நீலகிரியில் விடிய விடிய கனமழை செய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் ராட்சத மரங்கள் விழுந்து கிடக்கின்றன. கனமழையால் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது. நேற்றிரவு விடிய, விடிய பலத்த காற்றுடன் மழை பெய்தது. இன்று காலையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

உதகை – கூடலூர் சாலையில் ஆங்காங்கே பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைபோல், உதகை – இத்தலார் சாலை, மஞ்சூர், கிண்ணக்கொரை, அப்பர் பவானி, அவலாஞ்சி உட்பட்ட பல்வேறு இடங்களிலும் சாலையோர ராட்சத மரங்கள் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரங்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை, தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மழை பொழிவு அதிகரித்த காரணத்தால் கடுங்குளிர் நிலவுகிறது. அங்குள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என, நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

தொடர் மழை காரணமாக மாவட்டத்திலுள்ள முக்கிய அணைகளிலும் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. இதனால் நீர்மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்வதால், மின் உற்பத்திக்கு முக்கியமாக பயன்படும் அணைகள் நிரம்பி வருகின்றன.

மேல்பவானி – 175 (210), போர்த்திமந்து – 105 (130), அவலாஞ்சி – 90 (171), எமரால்டு – 80 (184), முக்கூர்த்தி – 16 (18), பைக்காரா – 60 (100), சாண்டிநல்லா – 33.5 (49), கிளன்மார்கன் – 22.5 (33), மாயாறு – 16 (17), பார்சன்ஸ்வேலி – 55 (77), குந்தா – 87.5 (87), கெத்தை – 154 (156), பில்லூர் – 97(100) ஆகிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதில், குந்தா, கெத்தை, பில்லூர் அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன. முக்கூர்த்தி, பைக்காரா, சாண்டிநல்லா, கிளன்மார்கன், மாயாறு, பார்சன்ஸ்வேலி அணைகளில் நீர் இருப்பு 80 சதவீதத்துக்கு மேல் உள்ளது.

இதுகுறித்து குந்தா மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, “நீலகிரி மாவட்டத்தில் குந்தா, கெத்தை, பரளி, பில்லூர், பைக்காரா, மாயாறு, சிங்காரா, பார்சன்ஸ்வேலி, காட்டுக்குப்பை உட்பட 12 மின் நிலையங்கள் மூலமாக, தினமும் 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும். தற்போதைய நிலையில், மின் உற்பத்திக்கு உதவும் அணைகளில் 60 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர் இருப்பு உள்ளதால், மின் உற்பத்திக்கு சிக்கல் இருக்காது. 12 மின் உற்பத்தி நிலையங்களிலுள்ள 32 யூனிட்களும் தயார் நிலையில் உள்ளதால், பிரச்சினைகளை எளிதாக சமாளிக்க முடியும்” என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in