
சென்னையில் நேற்று நள்ளிரவில் முதல் பெய்து வந்த கனமழையால், விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 3 விமானங்கள் பெங்களூர் திரும்பிச் சென்றதோடு, 8 விமானங்கள் தாமதமாகி, பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் முதல் இன்று அதிகாலை வரை இடி மின்னல், சூறைக்காற்றுடன் பெய்து வந்த பலத்த மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டன.
டெல்லியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 154 பயணிகளுடன் நேற்று நள்ளிரவு 11:35 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரை இறங்க வந்தது. அந்த நேரத்தில் பலத்த சூறைக்காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது கொண்டிருந்ததால் விமானம் தரை இறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அதை போல் ஜெர்மன் நாட்டின் ஃபிராங்க்பார்ட் நகரில் இருந்து 268 பயணிகளுடன், நள்ளிரவு 12:05 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்க வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூர் திரும்பிச் சென்றது. அதைப்போல் இன்று அதிகாலை 1:15 மணிக்கு, கொல்கத்தாவில் இருந்து, 167 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்க வந்த, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் சென்னையில் தரை இறங்க முடியாமல், பெங்களூர் திரும்பிச் சென்றது.
மேலும் பாரிஸ் நகரில் இருந்து சென்னை வந்த ஏர் பிரான்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஹைதராபாத்தில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் வட்டம் வடித்து விட்டு, தாமதமாக தரையிறங்கின. மேலும் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களான பாங்க்காக், ஃபிராங்க்பார்ட், பாரிஸ் ஆகிய 3 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. விமானங்கள் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.