கனமழையால் தனித்தீவான முகலிவாக்கம்: நீரில் சிக்கிய மக்கள் படகுகள் மூலம் மீட்பு

கனமழையால் தனித்தீவான முகலிவாக்கம்: நீரில் சிக்கிய மக்கள் படகுகள் மூலம் மீட்பு

சென்னை, முகலிவாக்கத்தில் வெள்ள நீரால் மூழ்கியுள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களைப் படகுகள் மூலம் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் கடந்த மூன்று நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. வெள்ளத் தடுப்பு பணிகள் நிறைவு பெறாத காரணத்தால் போரூர் அருகே உள்ள முகலிவாக்கம் திருவள்ளூர் நகரில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.  இதனால் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்பு உள்ள இப்பகுதி முழுவதும் இடுப்பளவு தண்ணீர் வெளியேறமுடியாமல் தேங்கி இருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால், வீட்டு உபயோக பொருட்கள் நீரில் நனைந்து வீணாகியுள்ளது.

இந்நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்ற பூந்தமல்லி, வில்லிவாக்கம், மதுரவாயல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு துறையினர் படகுகளுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று இரவு முழுவதும் அந்தப் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “மழை நீர் வெளியே செல்லும் அளவிற்கு பணிகள் நடைபெறவில்லை. இதனால் இந்தப் பகுதியில் தண்ணீர் தேங்குகிறது. இதை நாங்கள் சரிசெய்து கொடுக்க அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறோம். இதைத் தொடர்ந்து படகு வசதி, பால், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தண்ணீர் வடிந்துவிட்டால் மின்சாரம் கொடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்" என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in