
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இ-சிகரெட் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் இணையதளங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் நோட்டீஸ் விடுத்துள்ளது.
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளாக இ-சிகரெட்டுக்கு எதிரான சட்டம் அமலில் உள்ளது. இதன்படி இ-சிகரெட் ரகங்களை தயாரிப்பது, விற்பனை செய்வது, இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்வது, பதுக்குவது, விநியோகம், விற்பனை மற்றும் விளம்பரம் செய்வது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த தடையை மீறி, இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக இ-சிகரெட் விற்பனை செய்யப்படுவது குறித்து மத்திய அரசு கவனத்துக்கு வந்தது. இதன் அடிப்படையில் மத்திய சுகாதார அமைச்சகம், இ-சிகரெட் விற்பனையில் ஈடுபட்ட 15 இணையதளங்களுக்கு நோட்டீஸ் விடுத்தது. இதனையடுத்து உடனடியாக 4 இணையதளங்கள் தங்களது இ-சிகரெட் விற்பனையை நிறுத்துவதாக இறங்கி வந்துள்ளன. ஏனைய இணையதளங்கள் செவிசாய்க்காததோடு, இ-சிகரெட் விற்பனை மற்றும் விளம்பரங்களை தொடர்ந்து வருகின்றன.
எனவே இந்த இணையதளங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் வாயிலாக குறிப்பிட்ட இணையதளம் இந்தியாவில் முடக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், சமூக ஊடகங்கள் வாயிலாக இ-சிகரெட் விற்பனை செய்யப்படுவது தொடர்பான புகார்களை அடுத்து, சமூக ஊடகங்களையும் மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.