‘எச்சரிக்கை: அறிகுறிகள் அற்ற எக்ஸ்பிபி திரிபு உயிரைப் பறிக்கும்..?’

கரோனாவை விட வேகமாக பரவும் வதந்திகள்
‘எச்சரிக்கை: அறிகுறிகள் அற்ற எக்ஸ்பிபி திரிபு உயிரைப் பறிக்கும்..?’

சீனாவில் தலைவிரித்தாடும் கரோனா புதிய திரிபு, இந்தியாவிலும் கால் பதித்திருக்கிறது. ஆனால் கரோனா திரிபுகளைவிட வெகுவேகமாக அவை குறித்தான வதந்திகள் பரவி வருகின்றன.

கடந்த சில தினங்களாக வாட்ஸ் அப்பில் பரவும் ஒரு தகவல் பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் பெயரிலான அந்த பதிவில், ஒமைக்ரானின் துணைத் திரிபான எக்ஸ்பிபி பாதிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. காய்ச்சல், இருமல் உள்ளிட்ட வழக்கமான அறிகுறிகள் ஏதுமற்ற எக்ஸ்பிபி பரவலை கண்டறிவது கடினம் என்றும், மரணத்தை விளைவிக்கக் கூடியதும் என்றும்.. பல்வேறு பீதியூட்டும் தகவல்களை உள்ளடக்கி இருக்கிறது.

இந்த தகவல் வாட்ஸ் அப் வாயிலாக வேகமாக பரவியதில், பொதுமக்கள் புதிய அச்சத்துக்கு ஆளாயினர். அதே வேகத்தில் இந்த பகிர்வு மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் பார்வைக்கும் சென்றது. இதனையடுத்து இன்று(டிச.22) மதியம் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட பதிவில், மேற்படி வாட்ஸ் அப் தகவல் போலியானது என்ற விளக்கம் இடம் பெற்றிருக்கிறது.

கடந்த மாதம் சர்வதேசளவில் மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்பிபி திரிபு குறித்த மருத்துவ ஆராய்ச்சியின் முடிவில், டெல்டா ரகங்களை விட எக்ஸ்பிபி திரிபு வேகமாக பரவக்கூடியது என்றாலும், அவற்றால் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதில்லை என தெரிய வந்தது. கரோனாவின் திரிபுகள் அவற்றின் துணை திரிபுகள் என நித்தம் ஏராளமான திரிபுகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு சில மட்டுமே மனித உடலின் உள்ளுறுப்புகளை பாதிக்கும் வகையில் அச்சுறுத்தலுக்கு உரியவை. அந்த வகையில் தற்போது சீனாவில் பரவும் பிஎஃப்.7 என்ற துணைத் திரிபு, அதன் பரவல் வேகம் மற்றும் பாதிப்பின் அடிப்படையில் பொருட்படுத்தக் கூடியது.

கரோனா திரிபுகள் வேகமாக பரவுவது கவலைக்குரியதாக இருக்கலாம். அவற்றை எதிர்கொள்வதில் அரசு பரிந்துரைக்கும் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதும், எச்சரிக்கையாக இருப்பதுமே உதவும். நமக்கு கிடைக்கும் வீண் வதந்திகளை மற்றவர்களுக்கு பரப்புவது, புதிய சிக்கல்களை உருவாக்குமே அன்றி, எந்த வகையிலும் தீர்வு அளிக்காது என்பதை உணர்வோம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in