
மக்கள் அதிகம் கூடும் திரையரங்கம், பூங்காக்கள், குழந்தைகள் விளையாடும் சிறுவர் பூங்கா, உணவு விடுதிகள், கூட்டம் அதிகம் உள்ள கடற்கரை பகுதிகள் ஆகிய இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என பொதுச் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது 993 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் 185 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாகச் சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தொடர்ச்சியாக பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.
ஏற்கெனவே, அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டுமென தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஒமைக்ரான் உறுமாற்றமான XBB, BA2 வகை தொற்று அதிகமாக பரவி வருவதால், மக்கள் அதிகம் கூடும் திரையரங்கம், பூங்காக்கள், குழந்தைகள் விளையாடும் சிறுவர் பூங்கா, உணவு விடுதிகள், கடற்கரை பகுதிகள் ஆகிய இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.